17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை... ஓய்வு பெறுகிறார் நியூசிலாந்து ஜாம்பவான் ராஸ் டெய்லர்


17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை... ஓய்வு பெறுகிறார் நியூசிலாந்து ஜாம்பவான் ராஸ் டெய்லர்
x
தினத்தந்தி 30 Dec 2021 5:59 AM GMT (Updated: 30 Dec 2021 8:05 AM GMT)

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் வரவிருக்கும் வங்கதேசத்துக்கு எதிரான உள்நாட்டு தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து,

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஆன ராஸ் டெய்லர்  தனது ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளார். 37 வயதாகும் ராஸ் டெய்லர், இதுவரை 110 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார், டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் நியூசிலாந்தின் சார்பாக அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை ராஸ் டெய்லர் கொண்டுள்ளார்.

மார்ச் 2006 ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக முதன் முதலில் ஒருநாள் சர்வதேச போட்டியின் மூலம் அறிமுகமானார் ராஸ் டெய்லர். பேட்டிங்ற்கு மிகவும் சவாலான ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 290 ரன்கள் எடுத்ததே இவரது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர்.

டெஸ்ட் போட்டிகளில் 7584 ரன்களையும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 8,581 ரன்களையும் எடுத்துள்ள ராஸ் டெய்லர், ஒருநாள் போட்டிகளில் 21 சதங்களையும், அனைத்து வடிவங்களிலும் 40 சதங்களையும் எடுத்துள்ளார் ராஸ் டெய்லர். 102 டி20 சர்வதேசப் போட்டிகளில் 1909 ரன்களை எடுத்துள்ளார்.

மொத்தமாக அனைத்து டி20 வடிவங்களிலும் 292 போட்டிகளில் 6429 ரன்களைக் குவித்துள்ளார். நல்ல பீல்டரான ராஸ் டெய்லர் டெஸ்ட்டில் 161 கேட்ச்களை எடுத்துள்ளார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 139 கேட்ச்களையும் டி20-யில் 46 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.

இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டின் உயரிய கோப்பையான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை நியூசிலாந்து வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். 

ஓய்வு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது :

இன்று நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான ஆறு ஒருநாள் போட்டிகளோடு நான் ஓய்வு பெறுகிறேன். 17 ஆண்டுகளாக நீங்கள் அனைவரும் அளித்த நம்பமுடியாத ஆதரவிற்கு நன்றி. எனது தேசத்திற்காக விளையாடியதை நினைத்து பெருமை கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story