"டோனியை போல விளையாடுகிறார்"- பெங்களூரு அணி வீரரை பாராட்டிய கேப்டன் டு பிளெஸ்சிஸ்


டோனியை போல விளையாடுகிறார்- பெங்களூரு அணி வீரரை பாராட்டிய கேப்டன் டு பிளெஸ்சிஸ்
x
தினத்தந்தி 31 March 2022 10:53 AM GMT (Updated: 31 March 2022 10:53 AM GMT)

டோனியை நினைவு கூர்ந்து டு பிளெஸ்சிஸ் பேசியது சென்னை அணி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'
மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற  6-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன்  பாப் டு பிளெஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

தொடக்கத்தில் பெங்களூரு அணி 7 ஓவர்கள் முடிவில் 40 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன்  பிறகு டேவிட் வில்லி, ரூதர்போர்டு, ஷாபாஸ் நதீம் ஆகியோர் சற்று நிலைத்து நின்று விளையாடினர். 
பெங்களூரு அணிக்கு கடைசி 2 ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற  நிலையில் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது. ஹர்ஷல் பட்டேல் - தினேஷ் கார்த்திக் ஜோடி 19-வது ஓவரில் தலா ஒரு பவுண்டரி அடித்தனர்.

கடைசி ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு பெங்களூரு அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார் தினேஷ் கார்த்திக். 

இறுதியில் பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் பேசியதாவது :

இது சிறந்த வெற்றி.கடைசி 5 ஓவரில் எம்.எஸ்.டோனி எப்படி விளையாடுவரோ அதுபோல தினேஷ் கார்த்திக் கூலாக விளையாடினார். தினேஷ் கார்த்திக்கின் அனுபவம் இறுதி கட்டத்தில் உதவியது. இலக்கை எட்டும் தூரம் வெகு தொலைவில் இல்லை என்பதை அறிந்த அவர் கூலாகவும் அமைதியாகவும் விளையாடினார். 

மேலும் கொல்கத்தா அணி வீரர்களின் பேட்டிங் வரிசையை சிதைத்த பந்து வீச்சாளர்கள் ஹர்சல் படேல் மற்றும் ஹசரங்காவுக்கு பாராட்டுக்கள்.குறைந்த இலக்கை எட்டும் போது நம்பிக்கையுடன் விளையாட வேண்டும். எளிதாக நினைத்து விட்டு விட கூடாது. கொல்கத்தா அணி வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

டோனியை நினைவு கூர்ந்து பாப் டு பிளெஸ்சிஸ் பேசியது சென்னை அணி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story