"ஒல்லியாக இருப்பதால் அடிக்கடி காயம் அடையலாம்"- ஹர்திக் பாண்டியாவை முன்பே எச்சரித்த பாக். முன்னாள் வீரர்
பாண்டியா காயம் காரணமாக சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பங்கேற்கவில்லை.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் மிக சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்பவர் ஹர்திக் பாண்டியா. 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவான இவர் காயம் மற்றும் பிட்னெஸ் பிரச்னையால் கடந்த 2 ஆண்டுகளில் பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்கவில்லை.
அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்டர் இடத்திற்கு தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், வெங்கடேஷ் ஐயர் ஆகிய வீரர்கள் போட்டிபோட்டு காத்திருக்கின்றனர்.
நடப்பு ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் பாண்டியா இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றால் இந்த ஐபிஎல் சீசன் அவருக்கு மிக முக்கியமானது.
இந்த நிலையில் அவர் மீண்டும் காயம் காரணமாக சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பங்கேற்கவில்லை. தற்போது இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஷோயப் அக்தர், "துபாயில் பும்ராவிடமும் ஹர்திக் பாண்டியாவிடமும் இதை பற்றி நான் கூறியிருக்கிறேன். அவர்கள் இருவருமே மெலிந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு பின்புறத்தில் சதையே கிடையாது.
தோள்பட்டைக்கு பின்னால் நான் இப்போதும் கூட வலுவான சதைகளை பெற்றிருக்கிறேன். பாண்டியாவை ஒருமுறை தொட்டுப்பார்த்தேன். அவர் மிக ஒல்லியாக இருக்கிறார். அவர் காயமடைய வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கவும் செய்தேன்.
ஆனால் அவர், நான் அதிக கிரிக்கெட் ஆடியிருக்கிறேன் என்றார். ஆனால் அதே போட்டியிலேயே அவர் காயமடைந்தார்" என அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story