தோனிக்கு கிடைத்த ஆதரவு கம்பீர், ஹர்பஜனுக்கு கிடைக்காதது ஏன்? - யுவராஜ் ஆதங்கம்

தோனிக்கு இந்திய அணியில் கிடைத்த ஆதரவு பலருக்கு கிடைக்காதது குறித்து யுவராஜ் பேசியுள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங். 2011 ஆம் ஆண்டு இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த இவர் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களுள் ஒருவராக விளங்கியவர்.
சமீபத்தில் ‘ஹோம் ஆஃப் ஹீரோஸ்’ நிகழ்ச்சியில் பேசிய யுவராஜ், தோனிக்கு இந்திய அணியில் கிடைத்த ஆதரவு பலருக்கு கிடைக்காதது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து யுவராஜ் கூறுகையில், " 2014-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் போது எனது நம்பிக்கை மிகவும் குறைவாக இருந்தது. நான் அடுத்த போட்டியில் கூட கைவிடப்படலாம் என்ற சூழல் இருந்தது. எனக்கு அணியில் இருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.
அந்த உலககோப்பைக்கு பிறகு எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக எல்லோரும் நினைத்தார்கள். நானும் அதயே நினைத்தேன். ஆனால் அது தான் வாழ்க்கை. அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் வெற்றிகளை ஏற்று கொள்ளும்போது உங்கள் தோல்விகளையும் ஏற்றுக்கொண்டு நீங்கள் முன்னேற வேண்டும்.
அதே நேரத்தில் ஒரு வீரராக பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடமிருந்து உங்களுக்கு முழு ஆதரவு கிடைத்தால் அது நிச்சயம் உதவிகரமாக இருக்கும். தோனியை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி நாட்களில் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதிக ஆதரவு அளித்தனர்.
இதனால் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனி விளையாடினார். இந்த ஆதரவினால் கடைசி வரை அவர் விளையாடினார். 350 ஒருநாள் போட்டிகளை தோனி விளையாடியுள்ளார்.
கம்பீர், சேவாக், ஹர்பஜன் சிங், விவிஎஸ் லஷ்மன் போன்றவர்களுக்கு இந்த ஆதரவு கிடைத்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். உங்கள் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கும் போது உங்களால் எப்படி சிறப்பாக பந்துவீச்சோ அல்லது பேட்டிங்கோ செய்ய முடியும்? " என யுவராஜ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story