ஐதராபாத் அணிக்கு எதிரான தோல்விக்கு என்ன காரணம் ? : 10-வது தோல்வி குறித்து ரோகித் சர்மா பேச்சு


Image Courtesy : BCCI / IPL
x
Image Courtesy : BCCI / IPL
தினத்தந்தி 18 May 2022 11:58 AM GMT (Updated: 18 May 2022 11:58 AM GMT)

5 முறை கோப்பை வென்ற மும்பை அணி இந்த சீசனில் 10-வது தோல்வியை பதிவு செய்துள்ளது.

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 65-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஒருகட்டத்தில் தோல்வியின் பிடியில் மும்பை இந்தியன்ஸ் அணி இருந்தது. கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 45 ரன்கள் தேவைப்பட்டது. ஐதராபாத் பந்துவீச்சாளர் நடராஜன் வீசிய 18-வது ஓவரில் மும்பை வீரர் டிம் டேவிட் 4 சிக்சர்களை பறக்கவிட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதே ஓவரில் இறுதி பந்தில் அவர் ரன் அவுட்டானார். 18 பந்துகளில் 46 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார். பின்னர் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.

மும்பை அணி ஏற்கனவே  பிளே ஆப்  சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. 5 முறை கோப்பை வென்ற மும்பை அணி இந்த சீசனில் 10-வது தோல்வியை பதிவு செய்துள்ளது.

நேற்று நடந்த போட்டிக்கு பிறகு தோல்விக்கான காரணம் குறித்து பேசிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், " கடைசிக்கு முந்தைய ஓவர் வரை நாங்கள் வெற்றி பெறுவோம் என நினைத்தேன். டிம் டேவிட் துரதிர்ஷ்டவசமான விதத்தில் ரன்-அவுட் ஆனார். ஆனால் அந்த ரன்-அவுட்-க்கு  முன்பு வரை நாங்கள் போட்டியில் வெற்றியின் பக்கம் இருந்தோம்.

ஆனால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள் மிகவும் பரபரப்பான சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்பட்டனர்." என ரோகித் சர்மா தெரிவித்தார்.

Next Story