கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் வைர மோதிரம், நகை கொள்ளை வீட்டுக்குள் கட்டிப்போட்டு விட்டு மர்மநபர்கள் தப்பினர்


கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் வைர மோதிரம், நகை கொள்ளை வீட்டுக்குள் கட்டிப்போட்டு விட்டு மர்மநபர்கள் தப்பினர்
x
தினத்தந்தி 31 Dec 2016 11:30 PM GMT (Updated: 31 Dec 2016 11:16 PM GMT)

மணலி அருகே வீட்டுக்குள் புகுந்து தொழிலாளியை கத்தியை காட்டி மிரட்டி வைர மோதிரங்கள், தங்க சங்கிலி மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள், அவரை வீட்டுக்குள் கட்டிப்போட்டு விட்டு தப்பிச்சென்று விட்டனர். மெத்தை தயாரிக்கும் தொழிலாளி மணலி அருகே சடையங்குப்பம

திருவொற்றியூர்,

மணலி அருகே வீட்டுக்குள் புகுந்து தொழிலாளியை கத்தியை காட்டி மிரட்டி வைர மோதிரங்கள், தங்க சங்கிலி மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள், அவரை வீட்டுக்குள் கட்டிப்போட்டு விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

மெத்தை தயாரிக்கும் தொழிலாளி

மணலி அருகே சடையங்குப்பம் பர்மா நகர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் முத்துராஜ்(வயது 48). இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர், கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். தற்போது முத்துராஜ் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

சோபா, மெத்தை உள்ளிட்டவை தயாரிக்கும் தொழில் செய்து வந்த முத்துராஜ், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். நேற்று காலை அவரது வீட்டுக்கு ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக பேச மர்மநபர் ஒருவர் வந்தார். அவரிடம் முத்துராஜ் பேசிக்கொண்டிருந்தார். அந்த நபர் தண்ணீர் கேட்டதால் அதை கொண்டு வர சமையல் அறைக்கு சென்றார்.

கத்திமுனையில் கொள்ளை

அப்போது மேலும் 3 மர்மநபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து முத்துராஜை கத்தியை காட்டி மிரட்டினர். அவர் கையில் அணிந்து இருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 2 வைர மோதிரங்கள், 2¼ பவுன் தங்கச் சங்கிலி மற்றும் பீரோவில் இருந்த ரூ.85 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அவர்கள் கொள்ளையடித்தனர்.

பின்னர் முத்துராஜை சமையல் அறை ஜன்னல் கம்பியில் கட்டிப்போட்டு, வாயில் துணியை வைத்து திணித்தனர். பின்னர் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

துப்பாக்கியால் மிரட்டினரா?

சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு ஒரு வழியாக கயிறை அவிழ்த்த முத்துராஜ், ஜன்னலை திறந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து முத்துராஜை மீட்டனர்.

இதுபற்றி சாத்தங்காடு போலீசில் புகார் செய்தார். அதில் அவர், மர்மநபர்கள் தன்னிடம் கத்தி மற்றும் துப்பாக்கியை காட்டி மிரட்டி வைர மோதிரங்கள், தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தன்னை கட்டிப்போட்டு விட்டு தப்பிச்சென்று விட்டதாக கூறி இருந்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முத்துராஜ் வீட்டில் கொள்ளை நடந்தது உண்மையா?, மர்மநபர்கள் அவரை துப்பாக்கியை காட்டி மிரட்டினரா? என விசாரித்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது.


Next Story