மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு ‘கேப்டன்’ நியமனம் குறைகள், கோரிக்கைகளை பயணிகள் தெரிவிக்கலாம்


மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு ‘கேப்டன்’ நியமனம் குறைகள், கோரிக்கைகளை பயணிகள் தெரிவிக்கலாம்
x
தினத்தந்தி 7 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-08T02:07:35+05:30)

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு ‘கேப்டன்’ நியமனம் குறைகள், கோரிக்கைகளை பயணிகள் தெரிவிக்கலாம்

திருச்சி,

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கேப்டன் பதவியில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் குறைகள், கோரிக்கைகளை பயணிகள் தெரிவிக்கலாம்.

ரெயிலுக்கு கேப்டன்

கப்பலில் ‘கேப்டன்’ என்னும் பதவி உண்டு. அதேபோல தற்போது ரெயிலிலும் கேப்டன் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. ஓடும் ரெயில்களில் பயணிகள் பாதுகாப்பு, இருக்கை வசதிகள், குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக தெரிவிப்பதற்கு ‘கேப்டன்’ என்னும் புதிய பதவி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ‘கேப்டன்’ பதவியில் ரெயில்வே ஊழியர் ஒருவர் நியமிக்கப்படுவார். அவரது பெயர் மற்றும் செல்போன் எண் குறித்த விபரம் பயணிகள் இருக்கை எண் அடங்கிய பட்டியலில் எழுதப்பட்டிருக்கும். ரெயிலில் பயணிக்கும் போது பயணிகள் குறைகள், உதவிகள், கோரிக்கைகள் எதுவும் இருந்தால் கேப்டனிடம் தெரிவிக்கலாம். அவர் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பார். தெற்கு ரெயில்வேயில் சென்னை, மதுரை, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களில் இந்த புதிய பதவி உருவாக்கப்பட்டு விட்டன. திருச்சி கோட்டத்திற்கு திருச்சி-சென்னை செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு ‘கேப்டன்’ பதவி நேற்று உருவாக்கப்பட்டது.

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10.40 மணிக்கு சென்னை புறப்பட்ட மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேப்டனாக பொன்சிகா நியமிக்கப்பட்டிருந்தார். முதல் கேப்டனான அவருக்கு முதுநிலை வணிக மேலாளர் அருண் தாமஸ் கலாதிகல், முதன்மை வணிக ஆய்வாளர் முத்துராஜா, முதன்மை டிக்கெட் பரிசோதகர் சையதுமுனாப் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். தொடர்ந்து தினமும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேப்டன் பதவியில் ரெயில்வே ஊழியர் நியமிக்கப்பட்டு பயணிப்பார்.

ரெயிலில் பயணத்தின் போது பயணிகள் அவரை அணுகி அல்லது செல்போனில் தொடர்பு கொண்டு குறைகள், கோரிக்கைகளை தெரிவித்தால் அவர் நடவடிக்கை எடுப்பார். கேப்டனுக்கான தொப்பி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து வந்ததாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரெயிலுக்கு கேப்டன் நியமிக்கப்பட்டிருப்பதற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து மற்ற ரெயில்களிலும் கேப்டன் பதவி உருவாக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story