உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா  உஷாரு..
x
தினத்தந்தி 8 Jan 2017 10:56 AM GMT (Updated: 2017-01-08T16:26:35+05:30)

நினைவு தெரிந்த நாளில் இருந்து அவள் ஏழ்மையுடனே வசித்து வந்தாள். பெரிய ஆறு ஒன்றின் கரையில் வரிசையாக போடப்பட்டிருந்த குடிசை வீடு ஒன்றில் அவள் தாயுடன் வசித்து வந்தாள். அவளது தந்தை சொந்த குடும்பத்தை மறந்து, இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நினைவு தெரிந்த நாளில் இருந்து அவள் ஏழ்மையுடனே வசித்து வந்தாள். பெரிய ஆறு ஒன்றின் கரையில் வரிசையாக போடப்பட்டிருந்த குடிசை வீடு ஒன்றில் அவள் தாயுடன் வசித்து வந்தாள். அவளது தந்தை சொந்த குடும்பத்தை மறந்து, இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தாயார் அருகில் உள்ள நகரத்திற்கு சென்று, நாலைந்து வீடுகளில் வேலைபார்த்து அதில் கிடைக்கும் வருமானத்தில் மகளின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் மகளை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துவிட வேண்டும் என்ற ஆசை தாய்க்கு இருந்தது.

தாய் விரும்பியபடியே அவள் கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தாள். கல்லூரி சூழ்நிலை அவளுக்குள் பல்வேறு சலனங்களை உருவாக்கியது. சக மாணவிகளின் நடை, உடை, செலவுமிகுந்த அலங்காரம், பணத்தை விரயமாக்கும் பொழுதுபோக்குகள் போன்றவைகளை அவள் பார்த்து மனதுக்குள் ஏங்கத் தொடங்கினாள். தாயாரின் வருமானத்தில் தன்னால் அப்படி எல்லாம் வாழ முடியாது என்பது அவளுக்கு தெரிந்திருக்கவே செய்தது.

அன்று அவளுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. தாயார், தான் வேலைபார்க்கும் வீட்டில் பணம் வாங்கித் தருவதாக கூறி அழைத்திருந்தார். அவளும் நகரத்தில் உள்ள அந்த வீட்டிற்கு தாயை சந்திக்க சென்றாள்.

அவள் காலிங் பெல்லை அழுத்தியதும் வந்து கதவைத் திறந்த வீட்டு உரிமையாளரின் மகன், சில வாரங்களிலே அவளை கவர்ந்து, அவளது காதலனாகி விட்டான். ஆடம்பரமாக, ஜாலியாக வாழ வேண்டும் என்ற அவளது ஏக்கங்களையும், எதிர்பார்ப்புகளையும் அறிந்த அவன், எளிதாக அவளை தன்வசப்படுத்தி விட்டான். அவள், அவனிடம் முதலில் கேட்டது செல்போன். அடுத்து அவள் கேட்காமலே உடைகள், ஆபரணங்கள், அழகு சாதன பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்தான். அவ்வப்போது செலவுக்கும் பணம் கொடுத்தான்.

அவளது நாகரிக உடைகள், கையில் புரண்ட பணத்தை பார்த்த கல்லூரித் தோழிகள், ‘உனக்கு இதை எல்லாம் வாங்கித் தருகிறவனிடம் கவனமாக இரு. திடீரென்று ஒருநாள் உன்னை எங்கேயாவது தனியாக அழைப்பான். உடல்ரீதியாக உன்னை பயன்படுத்திக் கொள்வான். அதன் பின்பு வயிற்றை தள்ளிக் கொண்டு நிற்காதே!’ என்றார்கள். ஆனால் அவர்கள் பழக ஆரம்பித்து பல வாரங்கள் ஆகியும், தோழிகள் சொன்னதுபோல் அவன் ஒருநாள்கூட அவளை தொட்டுப்பார்க்க முயற்சிக்கவில்லை. ஆனால் அருகில் உள்ள இன்னொரு மாநில எல்லைப் பகுதிக்கு மட்டும் தனது விலை உயர்ந்த காரில் அவளை அழைத்துச் செல்வான். அவனே காரை ஓட்டிச்செல்வான். அவளை முன் இருக்கையில் உட்கார வைத்து காதல் ரசம் சொட்ட சொட்ட பேசிக்கொண்டே செல்வான்.

‘எதற்காக அங்கு அடிக்கடி செல்கிறோம்?’ என்று அவள் கேட்டபோது, ‘தொழில்ரீதியாக நண்பர்கள் சிலரை சந்திக்க’ என்றான். சொன்னதுபோல் செல்லும் இடங்களில் சில நண்பர்களை சந்திக்கவும் செய்தான். நண்பர்களுக்குள் அவ்வப்போது பரிசுகள் பரிமாறிக்கொள்வார்கள்.

‘எத்தனையோ நாட்கள் அவனோடு சென்றும், எவ்வளவோ தனிமை சூழல்கள் அமைந்தும் அவன் தன்னை தொட்டுக்கூட பார்க்க விரும்பவில்லையே!’ என்று அவள் மகிழ்ச்சியடைந்தாள்.

அன்றும் அவர்கள் வழக்கம்போல் பக்கத்து மாநிலத்திற்கு சென்று, நண்பர்களை சந்தித்துவிட்டு திரும்பும் வழியில் போலீஸ் அவர்கள் வந்த காரை நிறுத்தியது. உடனே அதிர்ந்த அவன், காரை வேகமாக ஓட்டிச்சென்று தூரத்தில் நிறுத்திவிட்டு, இறங்கி தப்பி ஓடிவிட்டான்.

அவள் பயந்து நடுங்கிப் போனாள். போலீஸ் காரை சோதனை செய்தது. அங்கிருந்த பரிசு பொட்டலங்களை வெளியே எடுத்தது. அதில் இருந்தது போதைப் பொருட்கள். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அவள் சிக்கி, சிறையில் இருக்கிறாள்.

இப்படி ஏழை இளம் பெண்களுக்கு காதல் ஆசைகாட்டி, அவர்களுக்கு தெரியாமலே கடத்தல் வேலைகளில் பங்குபெற வைப்பது ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது.

– உஷாரு வரும்.Next Story