‘அய்யனோர் அம்மனோர்’ பண்டிகை: கோத்தர் இன மக்கள் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்


‘அய்யனோர் அம்மனோர்’ பண்டிகை: கோத்தர் இன மக்கள் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 8 Jan 2017 10:30 PM GMT (Updated: 2017-01-09T00:38:49+05:30)

‘அய்யனோர், அம்மனோர்’ பண்டிகையையொட்டி கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். கோத்தர் இன மக்கள் நீலகிரி மாவட்டத்தில் கோத்தர் இன ஆதிவாசி மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் குல தெய்வமாக ‘அய்யனோர், அம்மனோர்’ சாமியை வழிபட்டு வருகிறார்கள

கோத்தகிரி,

‘அய்யனோர், அம்மனோர்’ பண்டிகையையொட்டி கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.

கோத்தர் இன மக்கள்

நீலகிரி மாவட்டத்தில் கோத்தர் இன ஆதிவாசி மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் குல தெய்வமாக ‘அய்யனோர், அம்மனோர்’ சாமியை வழிபட்டு வருகிறார்கள். கோத்தகிரி அருகே உள்ள புதுகோத்தகிரியில் வசிக்கும் கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர், அம்மனோர் கோவில் கோத்தகிரி நேரு பூங்கா வளாகத்தில் அமைந்துள்ளது. இதனால் இங்கு ஆண்டு தோறும் அய்யனோர் அம்மனோர் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.

இதன்படி கடந்த 2–ந் தேதி புதுகோத்தகிரியில் உள்ள கோவிலில் அய்யனோர், அம்மனோர் பண்டிகை தொடங்கியது. இதையொட்டி சிறப்பு பூஜை செய்ய புதுகோத்தகிரியில் இருந்து தொட்டபெட்டா மற்றும் டால்பின்ஸ் நோஸ் பகுதிகளுக்கு சென்று மூங்கில் குருத்து மற்றும் தழைகளை கொண்டு வந்தனர்.

ஊர்வலம்

பின்னர் மூங்கில், தழைகள், பிரம்பு ஆகியவற்றால் கோவிலை சுத்தம் செய்து தினந்தோறும் ‘கக்கவால் கிச்சு’ எனப்படும் பூஜையை நடத்தி வந்தனர். இதையொட்டி கோத்தர் இன மக்கள் கடும் விரதம் இருந்து வருகிறார்கள்.

அய்யனோர், அம்மனோர் பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி புதுக்கோத்தகிரியில் இருந்து கோத்தர் இன மக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட அனைவரும் பாரம்பரிய உடையணிந்து கோத்தகிரியில் உள்ள தங்கள் குல தெய்வம் கோவிலுக்கு 4 கிலோ மீட்டர் நடந்து ஊர்வலமாக வந்தனர்.

பாரம்பரிய நடனம்

கோவிலில் விளக்கு தீபம் ஏற்றப்பட்டு நெய், உப்பு மற்றும் பணத்தை கோவிலில் காணிக்கையாக செலுத்தினார்கள். பின்னர் பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க தங்களது பாரம்பரிய நடனமாடி கோத்தர் இன மக்கள் மகிழ்ந்தனர். இன்று (திங்கட்கிழமை) சாமை அரிசி சாதம், உப்பு, சாம்பார் ஆகியவற்றை புதுக்கோத்தகிரியில் உள்ள தங்களது கோவிலில் சமைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படும். தொடர்ந்து ஊர் பெரியவர்கள் உண்ட பிறகு மற்ற அனைவருக்கும் வழங்கப்படும்.

இது குறித்து கோத்தர் இன மக்கள் கூறும் போது, எங்களது இனத்தின் முக்கிய பண்டிகையாக அய்யனோர், அம்மனோர் பண்டிகை உள்ளது. நாங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் வந்து இந்த பண்டிகையில் கலந்து கொள்வோம். இதே போல குலதெய்வம் கோவிலுக்கு வரும் முன் குழந்தைகளுக்கு கண்டிப்பாக பெயர் சூட்டி இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.


Next Story