வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு


வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு
x
தினத்தந்தி 8 Jan 2017 10:15 PM GMT (Updated: 2017-01-09T01:12:37+05:30)

வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். டிரைவர் சாவு திருவள்ளூர் மாவட்டம், புட்லூர் சி.எஸ்.ஐ.பள்ளி தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 41). மினி டெம்போ டிரைவர். புட்லூர் பக்தவச்சலம் நகரை சேர்ந்த கிளீனர் ஜெபஸ்டின் (40) என்பவருடன் மினி டெம்போவில் திரு

காஞ்சீபுரம்,

வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

டிரைவர் சாவு

திருவள்ளூர் மாவட்டம், புட்லூர் சி.எஸ்.ஐ.பள்ளி தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 41). மினி டெம்போ டிரைவர். புட்லூர் பக்தவச்சலம் நகரை சேர்ந்த கிளீனர் ஜெபஸ்டின் (40) என்பவருடன் மினி டெம்போவில் திருவள்ளூரில் இருந்து மரச்சாமான்களை ஏற்றிக்கொண்டு பெங்களூருவுக்கு சென்றார். அங்கு மரச்சாமான்களை இறக்கிவிட்டு மீண்டும் திருவள்ளூருக்கு திரும்பி கொண்டிருந்தார். காஞ்சீபுரத்தை அடுத்த சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தாமல் பகுதியில் வரும்போது மினி டெம்போ தரைப்பாலத்தில் மோதியது.

இதில் மினி டெம்போவை ஓட்டி சென்ற பாபு அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கிளீனர் ஜெபஸ்டின் படுகாயம் அடைந்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

திருவாலங்காடு

திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு பெரியதெருவை சேர்ந்தவர் சாரங்கபாணி (54). விவசாயி. நேற்று காலை இவர் தனது வயலில் இருந்து சம்பங்கி பூக்களை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் மார்க்கெட்டில் விற்க சென்றார்.

பட்டரைபெரும்புதூர் அருகே செல்லும்போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சாரங்கபாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது மகன் ராஜா திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

ஊரப்பாக்கம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜாசபரிராயன். இவரது மகன் மோசஸ் டேனியல் (17), இவர் கடந்த மாதம் 27–ந் தேதி மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் ஆதனூரில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் வந்த ஆட்டோ கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மோசஸ் டேனியல், ஜோசப் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மோசஸ் டேனியலை தாம்பரம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story