ரத்த புற்றுநோயை குணப்படுத்தும் மரபணு மாற்ற சிகிச்சை


ரத்த புற்றுநோயை குணப்படுத்தும் மரபணு மாற்ற சிகிச்சை
x
தினத்தந்தி 6 Feb 2017 10:08 AM GMT (Updated: 6 Feb 2017 10:08 AM GMT)

உலகில் மருத்துவமும், தொழில்நுட்பமும் அசுர வேகத்தில் ஒரு பக்கம் வளர்ந்து வருகிறது.

லகில் மருத்துவமும், தொழில்நுட்பமும் அசுர வேகத்தில் ஒரு பக்கம் வளர்ந்து வருகிறது. அதன் விளைவாக, ஒருபுறம் பல்வேறு மருந்துகளும் சிகிச்சைகளும் உருவாக்கப்பட்டு கோடிக்கணக்கான மக்கள் நோய் ஏற்படுத்தும் கிருமிகள் அல்லது காரணிகள் மற்றும் உயிர்கொல்லி நோய்களிடமிருந்தும் பாதுகாக்கப்படுகின்றனர். ஆனாலும், மற்றொரு புறம், உலகில் லட்சக்கணக்கான  மனிதர்கள்   புற்று நோய் போன்ற உயிர்கொல்லி நோய்களுக்கு வருடா வருடம் பலியாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

மேலும், உலகளவில் அதிக இறப்புக்குக் காரணமான நோய்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் புற்றுநோய்க்கு தற்போதுள்ள பிரதான சிகிச்சை என்றால் அது ‘கீமோ தெரபி’ எனும் மருந்து சிகிச்சைதான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சில சூழல்களில் ‘கீமோதெரபி’ மருந்துகளால் புற்றுநோயை குணப்படுத்த முடியாவிட்டாலும் புற்றுநோயாளிகளின் புற்றுக்கட்டிகளின் அளவைக் கூட குறைக்க முடிவதில்லை. ஆனால் புற்றுநோய்க்கு கீமொதரபியைத் தவிர வேறு மாற்று சிகிச்சைகள் எதுவும் இல்லாததால் அதைத்தான் தேர்வு செய்தாக வேண்டும்.

அதனால் புற்றுநோய்க்கான மாற்று சிகிச்சைகளுக்கான தேடுதல் தொடர்ந்த வண்ணமாய் இருக்கிறது. அத்தகைய ஒரு மருத்துவ ஆய்வு முயற்சியின் பலனாக, உடலின் நோய் எதிர்ப்பு உயிரணுக்களை மரபணு மாற்றம் செய்து அவற்றைக் கொண்டு இரு குழந்தைகளின் ‘லியூக்கீமியா’ எனப்படும் ரத்த புற்றுநோயை லண்டனில் உள்ள கிரேட் ஆர்மாண்ட் தெரு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.

இந்த மருத்துவ சிகிச்சையின் பெயர் ‘சி.ஏ.ஆர்.டி செல் தெரபி’ (CART cell therapy) என்பதாகும். தமிழில் இது ‘‘மரபணு மாற்ற நோய் எதிர்ப்பு ‘டி’ செல் உயிரணு’’ சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது.

 புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும் வகையில் சோதனைக் கூடத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட டி செல்களை நோயாளியின் ரத்த நாளம் வழியாக தேவைப்படும் போதெல்லாம் செலுத்த வேண்டும். இதன் மூலம் உலகில் முதல் முறையாக ‘லியூக்கீமியா’ எனப்படும் ரத்தப்புற்றுநோய் குணப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இயற்கையில் புற்றுநோயாளியின் உடலில் உள்ள ‘டி’ செல்கள் புற்றணுக்களை கண்டறிந்து கொல்ல உதவும். அத்தகைய திறன்கொண்ட ‘டி’ செல்களை மரபணு மாற்றம் மூலம் மேம்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள இரண்டு வழிகள் உண்டு.

ஒன்று, தற்போது வெற்றிகரமாக லியூக்கீமியாவை குணப்படுத்தியுள்ள முறை. இதன்படி கொடையாளரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ‘டி’ செல்களை சோதனைக்கூடத்தில் மரபணு மாற்றம் செய்வார்கள். பின்னர் அவற்றை நோயாளியின் ரத்த நாளம் வழியாக உடலுக்குள் செலுத்துவார்கள்.

மற்றொன்று, புற்றுநோயாளியின் ‘டி’ செல்களை முதலில் சேகரித்து, அவற்றை சோதனைக்கூடத்தில் மரபணு மாற்றம் செய்து பின்னர் அவற்றை ரத்த நாளம் வழியாக நோயாளியின் உடலுக்குள் செலுத்துவார்கள்.

முதல் சிகிச்சைக்கு ஆகும் செலவு இரண்டரை லட்சம் ரூபாய். ஆனால் இரண்டாவது சிகிச்சைக்கு கோடிக்கணக்கில் செலவாகும் என்று கூறப்படுகிறது.

மிகவும் முக்கியமாக, இரண்டாவது சிகிச்சை முறையில் இல்லாத சில நன்மைகள் முதல் சிகிச்சை முறையில் உண்டு. அதாவது, முதல் சிகிச்சை முறையை எந்த நோயாளிக்கும் உடனே செயல்படுத்த முடியும். அதற்கான மொத்த செலவே இரண்டரை லட்சம்தான். ஆனால் இரண்டாவது சிகிச்சை முறையில் முதலில் நோயாளியின் ‘டி’ செல்களை சேகரித்து அவற்றை மரபணு மாற்றம் செய்ய வேண்டும். இதற்கு மட்டுமே சுமார் 30 லட்சம் ரூபாய் செலவும் மற்றும் நீண்ட காலமும் பிடிக்கும்.

ஆக, வெவ்வேறு பொருளாதார நிலையில் உள்ள பெரும்பாலான மக்கள் எளிதில் பயன்படுத்திகொள்ளக் கூடிய மற்றும் தற்போது இரண்டு குழந்தைகளின் லியூக்கீமியா புற்றுநோயை குணப்படுத்தியுள்ள ‘சி.ஏ.ஆர்.டி செல் தெரபி’ சிகிச்சைதான் தற்போதைய சிறந்த சிகிச்சையாக கருதப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

‘டி’ செல் என்றால் என்ன?


மனிதனின் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள் என்று இரண்டு வகையான அணுக்கள் உள்ளன. இதில் வெள்ளை அணுக்கள் நமது உடலை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் போல செயல்படுகின்றன. ரத்தத்தில் கிருமிகள் ஏதேனும் நுழைந்தால் அதனுடன் போராடி அழிக்கும் பணியை இவை செய்கின்றன. அந்த வெள்ளை அணுக்களில் ‘டி’ அணுக்கள், ‘பி’ அணுக்கள் என இரண்டு அணுக்கள் உள்ளன. ‘டி லிம்போசைட்’ அணு என்பதன் சுருக்கம் தான் ‘டி’ அணுக்கள். இந்த ‘டி’ அணுக்கள் தான் நோய் எதிர்ப்பு திறனை அளிக்கும் தன்மை கொண்டவை. ‘பி லிம்போசைட்’ அணுக்கள் ‘பி’ அணுக்கள் என்று அழைக்கப்படுகிறது. இது நோய் பரப்பும் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை.

Next Story