திண்டிவனம் அருகே நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ; பயணிகள் அதிர்ச்சி


திண்டிவனம் அருகே நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ; பயணிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 6 Feb 2017 10:45 PM GMT (Updated: 2017-02-06T22:29:30+05:30)

சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில், திண்டிவனம் அருகே வந்தபோது திடீரென தீப்பொறிகள் பறந்தது.

விழுப்புரம்,

நெல்லை எக்ஸ்பிரஸ்

சென்னையில் இருந்து நெல்லைக்கு நேற்று முன்தினம் இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் உள்ள குளிர்சாதன வசதியுடைய பெட்டியின்(எஸ் 4) உள்ளே திடீரென புகை வந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த பயணிகளின் சிலர் வெளியே பார்த்தனர். அதில் ரெயில் சக்கரப்பகுதியில் இருந்து தீப்பொறிகள் பறந்தப்படி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் ரெயிலில் வந்த அதிகாரிகளிடம் இதுபற்றி தெரியப்படுத்தினார்கள்.

சரிசெய்யும் பணி

பின்னர் இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் ரெயில் திண்டிவனம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் என்ஜின் டிரைவர்கள் ரெயிலை அங்கு நிறுத்தினர். தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்கள் தீப்பொறிகள் பறந்த ரெயில் பெட்டிக்கு விரைந்து சென்று பார்த்தனர். பின்னர் அதை தற்காலிகமாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த பணி முடிந்தவுடன் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு, விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு 10.20 மணிக்கு வந்தது. அங்கிருந்த ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் தீப்பொறிகள் பறந்த அந்த ரெயில் பெட்டியை முழுவதுமாக பரிசோதனை செய்து, சீரமைத்தனர். இதை தொடர்ந்து அங்கிருந்து சுமார் 1 மணி நேர தாமதத்துக்கு பின் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து 11.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதன் மூலம் சுமார் ஒரு மணிநேரம் காலதாமதமாக சென்றது.

இந்த சம்பவத்தால் திண்டிவனம் மற்றும் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரி விளக்கம்

இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ரெயில் பெட்டியில் இருந்த இரும்பு சக்கரத்துடன் பிரேக் ஷூ பிடித்து கொண்டதால், தீப்பொறிகளுடன் கரும் புகை வந்தது. இதை சரியான நேரத்தில் பார்த்ததால், உடனடியாக சீரமைக்க முடிந்தது என்றார்.


Next Story