லாரி, வேன், கார்களில் பேட்டரிகளை திருடும் மர்ம கும்பல் தொடர் சம்பவங்களால் போலீசார் திணறல்


லாரி, வேன், கார்களில் பேட்டரிகளை திருடும் மர்ம கும்பல் தொடர் சம்பவங்களால் போலீசார் திணறல்
x
தினத்தந்தி 6 Feb 2017 8:19 PM GMT (Updated: 6 Feb 2017 8:19 PM GMT)

திருச்சியில் சாலையோரம் நிறுத்தப்படும் லாரி, வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் பேட்டரிகளை திருடும் மர்ம கும்பலின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்த தொடர் சம்பவங்களால் போலீசார் திணறி வருகிறார்கள்.

திருச்சி,

வாகன பேட்டரிகள் திருட்டு

திருச்சி மாநகர பகுதிகளில் சமீபகாலமாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை தாக்கி சங்கிலி பறிப்பது, வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த குற்ற சம்பவங்கள் குறித்து போலீஸ் கமிஷனரின் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். தற்போது மாநகர காவல்துறையினருக்கு சவால்விடும் வகையில் சாலையோரம் நிறுத்தப்படும் லாரி, வேன், கார் போன்ற வாகனங்களில் பேட்டரிகளை திருடும் கும்பலின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

இந்த கும்பல் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் இருந்த பேட்டரிகளை திருடி வருகிறார்கள். குறிப்பாக திருச்சி-புதுக்கோட்டை சாலை, டோல்கேட்டில் இருந்து பொன்மலை ஜி-கார்னர் வரை செல்லும், சாலை, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீர்புரம் அருகே உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக அளவில் வாகனங்களில் பேட்டரிகள் திருடப்படுகிறது. இந்த திருட்டு கும்பல் சொகுசு கார்களில் வந்தும், சரக்கு ஆட்டோக்களில் வந்தும் இரவு நேரங்களில் கைவரிசை காட்டி செல்வதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து சங்கிலி பறிப்பு, கொள்ளை போன்ற சம்பவங்களால் திணறி வரும் மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு இந்த பேட்டரி திருடும் கும்பல் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர் சம்பவம்

இது குறித்து தனிப்படை போலீஸ்காரர் ஒருவர் கூறும்போது, “திருச்சியில் ஒரு குற்ற சம்பவம் குறித்து அறிந்தவுடன் அதிகாரிகள் உத்தரவின்பேரில் அந்த சம்பவம் பற்றி துப்பு துலக்கி கொள்ளையர்களை தேடி வந்தால், அதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறி விடுகிறது. உடனே பழைய சம்பவத்தை விட்டு, விட்டு புதிய சம்பவத்தை விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இதில் புதிதாக வாகனங்களில் பேட்டரி திருடும் கும்பலின் நடமாட்டம் குறித்தும் தகவல் வந்துள்ளது. அந்த கும்பலையும் தேடி வருகிறோம்” என்று கூறினார். 

Next Story