புதுக்கோட்டை கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்


புதுக்கோட்டை கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 6 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-02-07T01:50:42+05:30)

புதுக்கோட்டையில் உள்ள கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை,

கருமாரியம்மன் கோவில்

புதுக்கோட்டை வ.உ.சி.நகர் 1-ம் வீதியில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 4-ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து வாஸ்துசாந்தி, பிரவேச பலி, கடஸ்தாபனம், முதற்கால யாகபூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் 2 மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜைகள், அஷ்டபந்தனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 4-ம் கால யாக சாலை பூஜைகள், கோ பூஜை, லெட்சுமி பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

கும்பாபிஷேகம்

பின்னர் காலை 9.30 மணிக்கு யாக சாலைகளில் வைத்து பூஜைகள் செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து கருமாரியம்மன், வலம்புரி விநாயகர், நாகம்மாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் வ.உ.சி.நகர், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story