பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
x
தினத்தந்தி 7 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-02-08T02:46:15+05:30)

மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

முற்றுகை போராட்டம்

மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், மிளகாய் பயிருக்கு ரூ.20 ஆயிரமும், விவசாய தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.15 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தினை 200 நாளாக உயர்த்த வேண்டும், குடிநீர் பிரச்சினையை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் தபால் அலுவலகத்தினை மாநில குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், தாலுகா குழு செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் முற்றுகையிட முயன்ற 14 பெண்கள் உள்பட 41 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல, பரமக்குடியில் தாலுகா அலுவலகத்தினை முற்றுகையிட முயன்ற 11 பெண்கள் உள்பட 52 பேரை போலீசார் கைது செய்தனர். சத்திரக்குடியில் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட முயன்ற 7 பேரையும், கமுதியில் தபால் அலுவலகத்தினை முற்றுகையிட முயன்ற ஒரு பெண் உள்பட 48 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ராமேசுவரம்

இதேபோல, ராமேசுவரத்தில் இந்தியன் வங்கியை முற்றுகையிட முயன்ற 57 பெண்கள் உள்பட 91 பேரையும், கீழக்கரையில் தாலுகா அலுவலகத்தினை முற்றுகையிட முயன்ற 2 பெண்கள் உள்பட 38 பேரையும், சிக்கல் பகுதியில் தபால் அலுவலகத்தினை முற்றுகையிட முயன்ற 21 பேர் கைது செய்யப்பட்டனா.

திருவாடானையில் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட முயன்ற 3 பெண்கள் உள்பட 28 பேரையும், முதுகுளத்தூரில் தபால் அலுவலகத்தினை முற்றுகையிட முயன்ற 27 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். ஆகமொத்தம் மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் 100 பெண்கள் உள்பட 382 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story