திருப்பத்தூர் அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் 2 –வது திருமணம் செய்த முன்னாள் ராணுவ வீரர் கைது 2 பேர் மீது வழக்கு
முதல் மனைவிக்கு தெரியாமல் 2–வது திருமணம் செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்,
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்திருப்பத்தூர் அருகே உள்ள ஓமகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பீம்ராஜ் (வயது 48). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கும் வேலூர் காட்பாடியை அடுத்த வாழ்வான்குன்றத்தை சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் பீம்ராஜுக்கும், ஜெயந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவனுடன் கோபித்து கொண்டு, வாழ்வான்குன்றத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு ஜெயந்தி சென்றுவிட்டார்.
அதன்பின் பீம்ராஜ், கலைச்செல்வி என்பவரை 2–வதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த விஷயம் ஜெயந்திக்கு தெரியாது.
போலீசில் புகார்இந்த நிலையில் தனக்கு தெரியாமல் கணவர் பீம்ராஜ் 2–வது திருமணம் செய்தது குறித்து காட்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஜெயந்தி புகார் அளித்தார். சம்பவம் நடந்த இடம் திருப்பத்தூரை அடுத்த குரிசிலாப்பட்டு போலீஸ் நிலைய எல்லையில் வருவதால், அந்த புகார் மனுவை குரிசிலாப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு காட்பாடி போலீசார் மாற்றம் செய்தனர். ஆனால் குரிசிலாப்பட்டு போலீசார் ஜெயந்தியின் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
அதைத்தொடர்ந்து ஜெயந்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகவலனிடம், அது குறித்து புகார் அளித்தார். அப்போது தனது புகார் மனுவை போலீசார் விசாரிக்க மறுப்பதால் தீக்குளிக்க உள்ளதாக தெரிவித்தார். அவருக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதனையடுத்து ஜெயந்தி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகவலன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் பீம்ராஜ், அவரது 2–வது மனைவி கலைச்செல்வி, தந்தை மாணிக்கம் ஆகிய 3 பேர் மீது திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கில் பீம்ராஜை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.