டி.கல்லுப்பட்டி, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சி பணிகள் அமைச்சர், கலெக்டர் ஆய்வு


டி.கல்லுப்பட்டி, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சி பணிகள் அமைச்சர், கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 28 Feb 2017 11:00 PM GMT (Updated: 28 Feb 2017 4:57 PM GMT)

டி.கல்லுப்பட்டி, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சி பணிகள் மற்றும் குடிநீர், சுகாதார பிரச்சினைகள் குறித்து அமைச்சர், கலெக்டர் ஆய்வு செய்தனர்.

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி

டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், டி.கல்லுப்பட்டி ஒன்றியம், பேரையூர், டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் அடிப்படை வசதிகள், வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார், கலெக்டர் வீரராகவராவ், கூடுதல் ரோகிணி ராமதாஸ் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் அமைச்சர் உதயக்குமார் பேசியதாவது:– மக்களின் பிரச்சினைகளை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது அ.தி.மு.க. அரசு.

வருகிற 3 மாதங்களுக்கு சரியான திட்டமிடலால் குடிநீர், சுகாதார பிரச்சினையை நிவர்த்தி செய்ய முடியும். திருமங்கலம் சட்டமன்ற தொகுதி மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக டி.கல்லுப்பட்டியில் இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. குடிநீர் பற்றாக்குறை 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும், அதற்கு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் ராஜேந்திரன், கலையரசி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருமங்கலம்

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை அமைச்சர், கலெக்டர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:– திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 கிராம ஊராட்சிகள், மற்றும் நகராட்சிகளில் எந்த எந்த பகுதிகளில் தண்ணீர் முழுமையாக வழங்கப்படுகிறது என்று பொதுமக்கள் கூறினர்.

குடிநீர் பிரச்சினை, சுகாதாரம், மின்விளக்குகள் சீரமைப்பது குறித்தும், இதர துறைகளின் குறைபாடுகளை சரிசெய்யும் பணி குறித்தும் கலெக்டர் எடுத்து கூறினார். பொதுமக்களின் தேவைக்காக தேவையான நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்பட உள்ளது. நிலத்தடிநீர் போதிய அளவு இல்லாததால், கோடைகாலத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாமல் இருக்க, இப்போது இருந்து கூடுதலாக முயற்சி செய்து மக்கள் குறைகளை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கலெக்டர் வீரராகவராவ், அதிகாரிகளிடம் மக்களின் பிரச்சினைக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அதை செயல்படுத்தும் விதம் குறித்து கேட்டறிந்து, அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.


Next Story