நரிமன்பாயிண்ட் – போரிவிலி இடையே படகு போக்குவரத்து அக்டோபர் மாதம் தொடங்க திட்டம்


நரிமன்பாயிண்ட் – போரிவிலி இடையே படகு போக்குவரத்து அக்டோபர் மாதம் தொடங்க திட்டம்
x
தினத்தந்தி 1 March 2017 3:00 AM IST (Updated: 1 March 2017 5:06 AM IST)
t-max-icont-min-icon

அக்டோபர் மாதம் முதல் நரிமன்பாயிண்ட் – போரிவிலி இடையே படகு போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மும்பை,

அக்டோபர் மாதம் முதல் நரிமன்பாயிண்ட் – போரிவிலி இடையே படகு போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நீர்வழிப்போக்குவரத்து

மும்பையில் நாளுக்கு நாள் வாகனங்கள் பெருகி வருகின்றன. இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மும்பையில் ஒரு நாளில் சராசரியாக பெஸ்ட் பஸ், மின்சார ரெயில்களில் 1 கோடி பேர் பயணம் செய்கின்றனர்.

இதையடுத்து மாநில அரசு நீர்வழிப்போக்குவரத்து திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கியது. கடந்த 2008–ம் ஆண்டு மும்பையில் உள்ள மேற்கு கடற்கரை பகுதியில் நீர்வழிப்போக்குவரத்தை தொடங்க அப்போதைய தலைமை செயலாளர் ஜானி ஜோசப் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அப்போது ரூ.2 ஆயிரம் கோடி செலவில் நீர்வழிப்போக்குவரத்து திட்டங்களை தொடங்க திட்டமிடப்பட்டது.

படகு போக்குவரத்து

இந்தநிலையில் நரிமன்பாயிண்ட் – போரிவிலி இடையே படகு சேவை தொடங்க மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து மாநில கடல்வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

நரிமன்பாயிண்ட் – போரிவிலி படகு போக்குவரத்து திட்டத்திற்கான டெண்டர் கேட்டு உரிமை கோருவது ஜனவரி 31–ந் தேதியுடன் முடிந்தது. ஒரே ஒரு நிறுவனம் மட்டும் டெண்டர் எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் அரை மணிநேரத்திற்கு ஒரு முறை நரிமன்பாயிண்ட் – போரிவிலி இடையே இருமார்க்கத்திலும் படகுகளை இயக்க உள்ளது. நரிமன்பாயிண்டில் இருந்து போரிவிலி செல்ல 45 நிமிடங்கள் ஆகும். அக்டோபர் மாதம் படகு போக்குவரத்து தொடங்கப்படலாம்.

காலை முதல் இரவு வரை...

தற்போது நரிமன்பாயிண்ட் பகுதியில் படகு துறைமுகம் இல்லை. தேசிய கலை அரங்கேற்ற மையம் (என்.சி.பி.ஏ.) அருகே படகு துறைமுகத்தை அமைக்க உள்ளோம். அங்கு படகு துறைமுகம் அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி தேவையில்லை. போரிவிலியில் ஏற்கனவே படகு துறைமுகம் உள்ளது.

முதலில் நரிமன்பாயிண்ட் – போரிவிலி இடையே இடைநிறுத்தம் இல்லாமல் இந்த சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளோம். பொது மக்களிடம் வரவேற்பு கிடைத்தால் மார்வே, வெர்சோவா, ஜூகு, பாந்திராவில் நிறுத்தி இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். காலை 6.30 மணி முதல் இரவு 9.30 வரை படகு சேவை வழங்க ஒப்பந்ததாரர் விருப்பம் தெரிவித்துள்ளார். இரவு நேரத்தில் படகுகளை இயக்க அனுமதி வழங்கப்படலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story