தக்கலை அருகே லாரி மோதி தொழிலாளி பலி


தக்கலை அருகே லாரி மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 1 March 2017 4:15 AM IST (Updated: 1 March 2017 5:11 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் மகனை பார்த்துவிட்டு திரும்பிய போது லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தக்கலை,

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

தொழிலாளி

தக்கலை அருகே உள்ள முளகுமூடு சக்காகாட்டுவிளையை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 27), கூலி தொழிலாளி. இவருக்கு உஷா என்ற மனைவியும், விக்னேஷ் (4) என்ற மகனும் உள்ளனர். தற்போது உஷா கர்ப்பிணியாக உள்ளார்.

இந்தநிலையில் விக்னேஷ் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவனை சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்த்தனர். உஷா, மகனின் அருகில் இருந்து கவனித்து வந்தார். விஷ்ணு நேற்று முன்தினம் மாலையில் ஆஸ்பத்திரிக்கு சென்றார். மகனை பார்த்துவிட்டு இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

லாரி மோதி பலி

பரைக்கோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விஷ்ணு தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கம் நின்றவர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலே விஷ்ணு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story