ஆண் குழந்தை பிறக்க பூஜை செய்வதாக பெண்ணிடம் 5¼ பவுன் நகை மோசடி மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு


ஆண் குழந்தை பிறக்க பூஜை செய்வதாக பெண்ணிடம் 5¼ பவுன் நகை மோசடி மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 2 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-02T19:10:19+05:30)

காரிமங்கலம் அருகே ஆண் குழந்தை பிறக்க பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் 5¼ பவுன் நகை மோசடி செய்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காரிமங்கலம்,

அரசு ஊழியர் மனைவி

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சீகலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய வித்யா (வயது 28). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று வித்யா தோட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனப்புல் அறுத்து கொண்டிருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க 2 ஆசாமிகள் மொபட்டை சாலையில் நிறுத்தி விட்டு வித்யா வேலை பார்த்து கொண்டிருந்த இடத்திற்கு சென்றனர்.

அப்போது அவர்கள் 2 பேரும் ரஞ்சித்குமாருக்கு தெரிந்தவர்கள் என்றும், தாங்கள் பெரியாம்பட்டியில் சித்த வைத்தியம் பார்ப்பதாகவும், வித்யாவிடம் கூறி உள்ளனர். மேலும் உங்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அதனால் ஆண் குழந்தை பிறப்பதற்காக உங்களுக்கு பூஜை செய்ய ரஞ்சித்குமார் தங்களை அனுப்பி வைத்ததாக அவர்கள் கூறி உள்ளனர்.

5¼ பவுன் மோசடி

இதையடுத்து வித்யா அவர்கள், 2 பேரையும் வீட்டிற்குள் அழைத்து சென்றார். அப்போது ஒரு ஆசாமி வித்யாவின் நெற்றியில் ஏதோ ஒரு பவுடரை பூசியுள்ளான். மற்றொருவன் பூஜை செய்ய இருப்பதால் உங்கள் கழுத்தில் உள்ள சங்கிலி மற்றும் கம்மலையும் கழற்றி சாமி படத்திற்கு முன்பு வைத்து விடுங்கள் என்று கூறி உள்ளான். இதையடுத்து வித்யா கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் சங்கிலி, காதில் இருந்த கால் பவுன் கம்பல் ஆகியவற்றை கழற்றி வைத்துள்ளார்.

அதன் பின்னர் அந்த ஆசாமிகள் பூஜை முடியும் வரை கண்ணை மூடி இருக்குமாறு கூறி உள்ளனர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு வித்யா கண்ணை திறந்த போது அந்த ஆசாமிகள் 2 பேரையும் காணவில்லை. அப்போது மர்ம ஆசாமிகள் 5¼ பவுன் நகையை மோசடி செய்து கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரஞ்சித்குமார் காரிமங்கலம் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story