நாய்கள் துரத்தியதில் வீட்டுக்குள் புகுந்த புள்ளிமான்


நாய்கள் துரத்தியதில் வீட்டுக்குள் புகுந்த புள்ளிமான்
x
தினத்தந்தி 3 March 2017 9:30 PM GMT (Updated: 3 March 2017 5:47 PM GMT)

அந்தியூர் அருகே நாய்கள் துரத்தியதில் வீட்டுக்குள் புகுந்த புள்ளிமான் வனத்துறையினர் மீட்டு காட்டுக்குள் விட்டனர்

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, யானை, கரடி, புள்ளிமான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. பருவமழை பொய்த்து போனதால் பர்கூர் மலைப்பகுதியில் தற்போது வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் வனப்பகுதியில் செடி, கொடிகள் காய்ந்தும், மரங்கள் பட்டுபோயும் உள்ளன. அதுமட்டுமின்றி நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை. இதனால் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக உணவு மற்றும் குடிநீருக்காக வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன.

இந்த நிலையில் குடிநீர் தேடி நேற்று காலை பர்கூர் வனப்பகுதியை விட்டு வெளியேறிய புள்ளிமான் ஒன்று அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்துக்குள் புகுந்தது. புள்ளிமானை கண்டதும் அங்குள்ள தெரு நாய்கள் விரட்ட தொடங்கின. உடனே நாய்களிடம் இருந்து தப்பி ஓடிய மான், அந்த பகுதியில் உள்ள வெள்ளை பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த குமார் என்பவரின் வீட்டுக்குள் புகுந்தது. அப்போது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த குமாரின் மனைவி கன்னியம்மாள் இதை கண்டதும் ஓடிச்சென்று வீட்டின் கதவை மூடினார். பின்னர் மானை துரத்தி வந்த தெருநாய்களை அங்கிருந்து விரட்டினார்.

இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் வனச்சரகர் ராமராஜ் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று புள்ளிமானை பார்வையிட்டனர். அப்போது அது 3 வயது உடைய ஆண் புள்ளிமான் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மானை மீட்டு வனத்துறையினர் அதை வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.


Next Story