ஈளாடா தடுப்பணையை தூர்வாரும் பணி மும்முரம்


ஈளாடா தடுப்பணையை தூர்வாரும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 3 March 2017 10:30 PM GMT (Updated: 3 March 2017 6:02 PM GMT)

கோத்தகிரியில் உள்ள ஈளாடா தடுப்பணையை ரூ.40 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோத்தகிரி நகரில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் முக்கிய நீராதாரமாக ஈளாடா தடுப்பணை விளங்குகிறது. கோத்தகிரியில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈளாடா கிராமத்தில் மலைப்பகுதியில் இருந்து வரும் ஓடைகள் மற்றும் ஊற்றுத்தண்ணீரை சேமிக்க இந்த தடுப்பணை கட்டப்பட்டது. 80 மீட்டர் நீளம், 65 மீட்டர் அகலம் மற்றும் 6 அடி ஆழமும் கொண்ட இந்த தடுப்பணையில் சுமார் ஒரு கோடியே 40 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.

ஈளாடா தடுப்பணையில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் கோத்தகிரி நகர பகுதியில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லாததால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோத்தகிரி பேரூராட்சி மூலம் இந்த தடுப்பணையை தூர்வார முடிவு செய்யப்பட்டது. இந்த பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் தூர்வாரும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

தூர்வாரும் பணி மும்முரம்

கோத்தகிரி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய அளவு பருவமழை பெய்யாததால் ஈளாடா தடுப்பணை தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோடை மழை பெய்யும் முன்பு ஈளாடா தடுப்பணையை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து ஈளாடா தடுப்பணையை ரூ.40 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:– மத்திய அரசின் மலைப்பகுதி மேம்பாட்டு நிதி தற்போது நிறுத்தப்பட்டதால் தமிழக அரசின் எஸ்.ஏ.டி.பி. நிதியில் இருந்து ஈளாடா தடுப்பணையை தூர்வார ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி மூலம் ஈளாடா தடுப்பணையை தூர்வாரப்படும். மேலும், அதன் பக்கவாட்டு சுவர்கள் கருங்கற்களால் கட்டப்படும். இதன் மூலம் ஈளாடா தடுப்பணையில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரின் அளவு கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அளக்கரை குடிநீர் திட்டம்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கோத்தகிரி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஈளாடா தடுப்பணை தூர்வாரப்படுகிறது. இருப்பினும் குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்க ரூ.10 கோடியே 60 லட்சம் செலவில் தொடங்கப்பட்ட அளக்கரை குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story