புலிவலத்தில் கிணற்றுக்குள் லாரி பாய்ந்ததில் டிரைவர் பலி
புலிவலத்தில் 60 அடி ஆழ கிணற்றுக்குள் லாரி பாய்ந்ததில் டிரைவர் பலி
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த புலிவலம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 37). இவருக்கு திருமணமாகி சீதா என்ற மனைவியும், கோகிலா(10) என்ற மகளும், ஜெயராம்(4) என்ற மகனும் உள்ளனர். சீனிவாசன் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். அவர் வழக்கம்போல் நேற்று காலை லாரியில் புலிவலத்தில் இருந்து புத்தனாம்பட்டிக்கு களிமண் லோடு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலையில் இருந்து சற்று தொலைவில் புதிதாக வெட்டப்பட்டிருந்த 60 அடி ஆழ கிணற்றுக்குள் லாரி பாய்ந்து கவிழ்ந்தத. இதில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து பற்றி தகவல் அறிந்த புலிவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து லாரியும், சீனிவாசன் உடலும் மீட்கப்பட்டன. இதையடுத்து சீனிவாசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி புலிவலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுமட்டுமின்றி சாலையில் இருந்து சற்று தொலைவில் உள்ள கிணற்றுக்குள் லாரி பாய்ந்து சென்று கவிழ்ந்தது எப்படி?என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.