முக்கண்ணாமலைப்பட்டி அருகே மீன்பிடி திருவிழா ஏராளமானோர் பங்கேற்றனர்


முக்கண்ணாமலைப்பட்டி அருகே மீன்பிடி திருவிழா ஏராளமானோர் பங்கேற்றனர்
x
தினத்தந்தி 8 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-09T02:40:18+05:30)

முக்கண்ணாமலைப்பட்டி அருகே மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர்.

இலுப்பூர்,

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி அருகே உள்ளது புதூர் கிராமம். இந்த ஊரை சுற்றி பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் பெரியகுளம் என்ற ஒரு குளம் உள்ளது. தற்போது இக்குளத்தில் தண்ணீர் குறைந்துவிட்ட நிலையில் இக் குளத்தில் மீன்கள் அதிக அளவில் இருந்து வந்தன. இதனையடுத்து அந்த குளத்த்தில் மீன்பிடி திருவிழா நடத்த புதூர் கிராம மக்கள் முடிவு செய்தனர்.

மீன்பிடி திருவிழா

இதையடுத்து நேற்று முன்தினம் இரவே அருகில் இருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று அதிகாலை முதலே குடும்பம் குடும்பமாகவும் நண்பர்களுடனும் சைக்கிள், மோட்டார் சைக்கிள், பஸ் போன்றவைகளில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் அப்பகுதியில் வந்து இறங்கினர். இதனையடுத்து முக்கண்ணாமலைப்பட்டி, புதூர் பகுதியில் மீன்பிடி திருவிழா களைகட்டியது.

ஏராளமான மீன்கள்

மீன் பிடிக்க பொதுமக்கள் மீன்வலை, சேலை, வேட்டியுடன் தயார் நிலையில் இருந்தனர். பின்பு காலை 7 மணிக்கு குளத்திற்கு வந்த புதூர் மிராஸ்தார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை கொடியை அசைத்ததும் மீன்பிடி திருவிழா தொடங்கியது. இதனையடுத்து ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர். மீன்பிடி திருவிழா நடந்த குளத்தில் சிலேபி, கெழுத்தி, விரால் போன்ற மீன்கள் அதிகமாக பிடிபட்டன. பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களிலும், பை, சாக்கு மூட்டைகளிலும் மீன்களை பிடித்து சென்றனர். இதனால் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் புதூர் பகுதிகள் திருவிழா கோலம் பூண்டது. 

Next Story