மாணவியை மோட்டார்சைக்கிளில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம், வாலிபர் கைது


மாணவியை மோட்டார்சைக்கிளில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம், வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-11T01:28:06+05:30)

தாராபுரம் கோவில் திருவிழாவுக்கு வந்தபோது மாணவியை மோட்டார்சைக்கிளில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் வாலிபர் கைது

தாராபுரம்,

தாராபுரம் கோவில் திருவிழாவுக்கு வந்தபோது மாணவியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

கோவில் திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளை திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இளைய மகள் பழனியில் உள்ள அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்.

இதற்கிடையில் தாராபுரம் புதுக்கோட்டை மேட்டில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவுக்கு வருமாறு தாராபுரத்தில் திருமணமான கூலிதொழிலாளியின் மூத்த மகள் பழனியில் உள்ள தனது தந்தையிடம் கூறினார். அதன்படி அந்த கூலித்தொழிலாளி தனது மனைவி மற்றும் 9–ம் வகுப்பு படிக்கும் தனது இளைய மகளை அழைத்துக்கொண்டு தாராபுரம் வந்தார்.

மாணவியை கடத்தி சென்றனர்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளை அந்த மாணவி, அவருடைய தந்தை மற்றும் குடும்பத்தினர் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அந்த மாணவி இயற்கை உபாதை கழிப்பதற்காக கூட்டத்தில் இருந்து வெளியே வந்து மறைவான இடத்திற்கு தனியாக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

அப்போது 2 ஆசாமிகள் “ மாணவியின் வாயை பொத்தி, அலேக்காக தூக்கி, யாருக்கும் தெரியாமல் மோட்டார் சைக்கிளில் வைத்து கடத்தி சென்றனர். வாயை பொத்தியதால் மாணவியால் கூச்சலிட முடியவில்லை.

பாலியல் பலாத்காரம்

அமராவதி பழைய ஆற்றுப்பாலம் பகுதியில் சென்றதும் பாலத்தின் கீழ் வைத்து அந்த ஆசாமிகள் 2 பேரும் மாணவியை ஒருவர்மாறி ஒருவர் என பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த கொடூர செயலை செல்போனில் வீடியோவாக படம் எடுத்ததாகவும் தெரிகிறது. அதன் பிறகு அந்த ஆசாமிகள் மாணவியிடம் ‘‘ இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், செல்போனில் எடுத்து வைத்துள்ள வீடியோவை இணைய தளத்தில் வெளியிட்டு, உன் குடும்பத்தின் பெயரை கெடுத்து விடுவோம்’’ என்று மிரட்டியுள்ளனர்.

பின்னர் அந்த ஆசாமிகள் அந்த மாணவியை அதே மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டுவந்து, கோவிலுக்கு அருகே இறக்கி விட்டுவிட்டு, தப்பிச் சென்று விட்டனர்.

மாணவி கதறல்

இதற்கிடையே வெளியில் சென்ற மகள் நீண்டநேரமாகியும் திரும்பி வராததை கண்டு மாணவியின் தந்தை அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து மாணவியை அவருடைய தந்தை மற்றும் உறவினர்கள் கோவில் பகுதி முழுவதும் தேடினர். ஆனாலும் மாணவியை காணாததால் அடுத்து என்ன செய்யலாம் என்று வீட்டிற்கு சென்று கவலையில் ஆழ்ந்தனர். இதற்கிடையில் போலீசில் புகார் செய்யலாமா? என்று யோசித்து கொண்டிருந்தபோது நள்ளிரவு சுமார் 11.30 மணிக்கு வீட்டிற்கு மாணவி அழுது கொண்டே வந்தாள்.

அப்போது மாணவியிடம் அவருடைய பெற்றோர், எங்கே போனாய்? உன்னை நாங்கள் எங்கெல்லாம் தேடினோம்? என்ற கவலை தோய்ந்த முகத்துடன் கேட்டனர். அப்போது அந்த மாணவியிடம், வீட்டில் இருந்தவர்கள் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது நடந்த விபரத்தை அந்த மாணவி கூறி கதறி அழுததோடு, தன்னை சீரழித்தவர்களை தனக்கு அடையாளம் தெரியும் என்றும் கூறினார்.

வாலிபர் சிக்கினார்

இந்த நிலையில் பட்டத்தரசியம்மன் கோவில் அருகே ஒரு மோட்டார் சைக்கிள் நீண்டநேரமாக கிடந்துள்ளது. அந்த மோட்டார் சைக்கிளை யாரும் எடுத்துச் செல்லவில்லை. இதனால் அங்கிருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எனவே மாணவியை கடத்திச் சென்றவர்களில் ஒருவருடைய மோட்டார் சைக்கிளாகத்தான் அது இருக்கும் என மாணவியின் உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி அந்த மோட்டார் சைக்கிளை யாராவது எடுக்க வருகிறார்களா? என சற்று துரத்தில் மறைவான இடத்தில் இருந்து அந்த மாணவியும், அவருடைய உறவினர்களும் கண்காணித்தனர். இந்த நிலையில் அந்த மோட்டார் சைக்கிளை எடுத்து செல்ல நேற்று காலை வாலிபர் ஒருவர் அங்கு வந்தார்.

அப்போது மாணவி “ இவரும், மற்றொருவரும்தான் தன்னை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்“ என்று அடையாளம் காட்டினார். இதனால் கோபம் அடைந்த மாணவியின் உறவினர்கள் “அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து தாராபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கைது

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் தாராபுரம் கோட்டைமேட்டை சேர்ந்த கர்ணன் என்பவரின் மகன் சேதுபதி (வயது 27) என்பதும், இவருடன் மீனாட்சிபுரம் வாய்க்கால்மேட்டை சேர்ந்த சின்னபாப்பான் என்பவரின் மகன் காளிமுத்து (20) என்பவரும் சேர்ந்து மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது.

அதன்பின்னர் மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சேதுபதியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள காளிமுத்துவை போலீசார் தேடிவருகிறார்கள். கோவில் திருவிழாவின் போது மின்தடையை பயன்படுத்தி பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு வழக்குகள்

நண்பர்களான சேதுபதியும், காளிமுத்துவும், கூலிவேலை செய்து வருகிறார்கள். இதில் சேதுபதிக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. இவர் அடிதடி, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், இவர் மீது தாராபுரம், பல்லடம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேதுபதி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்துவந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story