மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் மூளைச்சாவு: மாணவனின் உடல் உறுப்புகள் தானம்


மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் மூளைச்சாவு: மாணவனின் உடல் உறுப்புகள் தானம்
x
தினத்தந்தி 10 March 2017 10:30 PM GMT (Updated: 10 March 2017 8:47 PM GMT)

தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் மூளைச்சாவு அடைந்த 8–ம் வகுப்பு மாணவனின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 7 பேருக்கு பொருத்தப்பட்டது.

வில்லியனூர்

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கோனேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், கட்டிடத் தொழிலாளி. இவருடைய மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 13). அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே உள்ள ஒரு தென்னை மரத்தில் அவன் ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தான்.

இதில் ஸ்டீபன்ராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவனை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று காலை ஸ்டீபன் ராஜ் மூளைச்சாவு அடைந்தான்.

மூளைச்சாவு

இதுகுறித்து மாணவனின் பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். அதனைக் கேட்டதும் அவர்கள் கதறி அழுதனர். இந்தநிலையில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு ஸ்டீபன்ராஜின் பெற்றோரிடம் டாக்டர்கள் கேட்டுக் கொண்டனர். மாணவனின் உடல் உறுப்புகளை பெறுவதன் மூலம் மற்றவர்களின் உயிர்கள் பாதுகாக்கப்படும் என்பது குறித்து அவர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை மாணவன் ஸ்டீபன்ராஜின் பெற்றோர் ஏற்றுக்கொண்டு உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

அதனைத் தொடர்ந்து மாணவன் உடலில் இருந்து கண், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை தானமாக பெற்றனர். அந்த உடல் உறுப்புகள் அனைத்தும் 7 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.


Next Story