தாளனகட்டே கிராமத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் தொடர் அட்டகாசம்


தாளனகட்டே கிராமத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் தொடர் அட்டகாசம்
x
தினத்தந்தி 10 March 2017 10:34 PM GMT (Updated: 2017-03-11T04:03:53+05:30)

தாளனகட்டே கிராமத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஹலகூர்

தாளனகட்டே கிராமத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தாளனகட்டே கிராமம்

மண்டியா மாவட்டம் ஹலகூர் அருகே உள்ளது தாளனகட்டே கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்தத்தி வனப்பகுதியில் இருந்து 2 காட்டுயானைகள் வெளியேறின. அவைகள் தாளனகட்டே கிராமப்பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன.

அங்குள்ள விளைநிலங்கள், தோட்டங்களில் புகுந்து பயிர்களை பிடுங்கி தின்றும், காலால் மிதித்தும் நாசப்படுத்தின. இதில் குறிப்பாக அனில் என்ற விவசாயிக்கு சொந்தமான 9 ஏக்கர் பரப்பளவு கொண்ட தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த தென்னை மரங்கள், சப்போட்டா மரங்கள் மற்றும் பயிர்களை நாசப்படுத்தின.

காட்டுயானைகள் அட்டகாசம்

அதேபோல் நேற்று முன்தினமும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 6 காட்டுயானைகள், தாளனகட்டே கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. அங்குள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. மேலும் நேற்று அதிகாலையில் ஒற்றைக் காட்டுயானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளது.

இதனால் பீதி அடைந்துள்ள கிராம மக்கள் நேற்று வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளால் நாசப்படுத்தப்பட்ட தோட்டங்களை பார்வையிட்டனர். மேலும் தொடர் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகள், வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். காட்டுயானைகளால் பயிர்களை இழந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரண நிதி கேட்டு வனத்துறையினரிடம் முறையிட்டுள்ளனர்.

வனத்துறையினர்...

இதற்கிடையே நேற்று இரவு ராமநகர் மாவட்டம் கப்பூட்லு வனப்பகுதியில் இருந்து 4 காட்டுயானைகள் வெளியேறின. அவைகள் மண்டியா மாவட்டம் எலியூரு, சாக்யா வழியாக ஹலகூர் பகுதிக்கு வந்தன. கிராமப் பகுதியில் அட்டகாசம் செய்த அந்த காட்டுயானைகள், பின்னர் அவைகள் சிம்சா நதிக்கு சென்று தண்ணீர் குடித்தன. அதையடுத்து அந்த 4 காட்டுயானைகளும் நதிக்கரையோரம் தஞ்சம் அடைந்தன.

இதனால் பீதி அடைந்த கிராம மக்கள், காட்டுயானைகள் சிம்சா நதிக்கரையோரம் தஞ்சம் அடைந்துள்ளது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பட்டாசுகள் வெடித்தும், தீப்பந்தத்தை காண்பித்தும் யானைகளை விரட்டினர். அதையடுத்து அந்த 4 காட்டுயானைகளும் எக்கூட்லு வனப்பகுதிக்கு ஓடிவிட்டன. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் காட்டுயானைகள் மீண்டும் கிராமத்திற்குள் புகுந்துவிடும் என்பதால் வனத்துறையினர் தாளனகட்டே கிராமத்தில் முகாமிட்டுள்ளனர்.


Next Story