மீனவர்களுக்காக தி.மு.க. எப்போதும் குரல் கொடுக்கும் மு.க.ஸ்டாலின் பேச்சு


மீனவர்களுக்காக தி.மு.க. எப்போதும் குரல் கொடுக்கும் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 11 March 2017 11:15 PM GMT (Updated: 2017-03-11T18:59:09+05:30)

மீனவர்களுக்காக தி.மு.க. எப்போதும் குரல் கொடுக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

ராமேசுவரம்,

அஞ்சலி

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்தினரை நேற்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பிரிட்ஜோவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். சிகிச்சை பெற்று வரும் சரோனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் மீனவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

கோரிக்கை நிறைவேறவில்லை

மகனை இழந்து வாடிக்கொண்டுள்ள தாய்–தந்தையரை சந்தித்து ஆறுதல் சொன்ன நேரத்தில், அவர்கள் எங்களிடத்தில் சொன்னது என்னவெனில், நாங்கள் மகனை இழந்ததைப் பற்றி கூட கவலைப்படவில்லை, எங்கள் மகனை இழந்த காரணத்தால் மாநில அரசு தந்த 5 லட்ச ரூபாய் நிதியுதவியை கூட நாங்கள் வாங்கவில்லை. காரணம், எங்களுக்கு நிதி பெரிதல்ல, எங்களுக்கு உதவி தேவையில்லை, உரிமைதான் எங்களுக்கு முக்கியம். இதுபோன்றதொரு சம்பவம் இனி நடக்கக்கூடாது, என்று எடுத்துச் சொன்னார்கள்.

உள்ளபடியே அது மிகுந்த நெகிழ்ச்சியாக அமைந்திருந்தது. வெளியுறவுத்துறை அதிகாரிகள் வந்து இதுபோன்றதொரு சம்பவம் இனி நடக்காது என்ற உறுதிமொழியை தர வேண்டும் என்ற கோரிக்கையும் இதுவரை நிறைவேறவில்லை. துறையின் மந்திரி இல்லாவிட்டால், இணை மந்திரிக்கு பொறுப்புண்டு. இல்லையெனில் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள், மத்திய அரசின் அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகள் யாராவது வந்திருக்க வேண்டும். அவர்களாவது இங்கு வந்து பேசி, ஒரு ஆறுதலாவது சொல்லி விட்டுச் சென்றிருக்க வேண்டும். ஆனால், இதுவரையிலும் யாரும் வரவில்லை.

அரசியலாக்க விரும்பவில்லை

நாம் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், இன்றைக்கு நாம் இந்தியாவில் தான் இருந்து கொண்டிருக்கிறோம். இதை ஏன் மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை? அதேபோல இங்கே இருக்கக்கூடிய மாநில அரசு உரிய வகையில் ஏன் அழுத்தம் தரவில்லை? இதை ஏதோ அரசியல் பேசுவதாக யாரும் தயவுசெய்து கருதிவிடக்கூடாது. இந்தப் பிரச்சினையை அரசியலாக்க நான் விரும்பவில்லை. இது அரசியலுக்கு எல்லாம் அப்பாற்பட்டு இருக்கக்கூடிய பிரச்சினை. மனிதாபிமானப் பிரச்சினை. நமது மீனவர்களின் பிரச்சினை.

துணை நிற்கும்

இதற்கொரு நல்ல தீர்வு காண வேண்டுமென்று சொன்னால், கச்சத்தீவை மீட்கின்ற பணியில் மத்திய அரசு துணை நிற்க வேண்டும். மாநில அரசு அதற்குரிய அழுத்தத்தை தர வேண்டும். கச்சத்தீவை மீட்டால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் சூழ்நிலை உருவாகும். அதனை இங்கு அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொள்கிறேன். இந்தப்போராட்டத்திற்கு எனது முழு ஆதரவை தி.மு.க. சார்பில் தெரிவித்து, தி.மு.க. என்றைக்கும் உங்களுக்கு துணை நிற்கும், குரல் கொடுக்கும் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story