புதுவை நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை தேவை


புதுவை நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை தேவை
x
தினத்தந்தி 11 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-12T03:27:08+05:30)

புதுவை நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை தேவை விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

புதுச்சேரி,

புதுவையில் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி புதுச்சேரி மாநில பகுதிக்கான கூட்டம் பூமியான்பேட்டையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முற்போக்கு மாணவர் கழக மாநில செயலாளர் இளவரசன் தலைமை தாங்கினார். ஏகவள்ளி, முபாரக், சுடர்வாளன், மணிமாறன், அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக துணை பொதுச்செயலாளர் பாவாணன் கலந்துகொண்டு பேசினார். கபிலன் உள்பட பலர் நோக்கவுரையாற்றினார்கள்.

ஹைட்ரோ கார்பன் திட்டம்

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:–

* புதுவை முன்னாள் அமைச்சர் சந்திரகாசு மரணம் அதிர்ச்சியை அளித்துள்ளது. அவருக்கு ஆழந்த இரங்கலையும், அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

* 2016 மார்ச் மாதத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. புதுவை மாநிலம் காரைக்கால் பகுதிக்கு சேரவேண்டிய காவிரி நீரை பெருவது தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான வக்கீல்களை நியமனம் செய்து மாநில உரிமையை பெருகுவதற்கு புதுவை அரசு சட்டப்பூர்வமாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

* காரைக்கால் நெடுங்காடு பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்பந்தம் முடிவாகி உள்ளது. இந்த திட்டத்தை புதுவை மாநிலத்தில் நடைமுறைப்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுவிட்டது என்ற அறிவிப்பை வெளியிடும் வரை மாநில அரசின் சார்பில் தொடர்ந்து அழுத்தம் தரவேண்டும்.

அமைச்சர் பதவி விலக வேண்டும்

* புதுவை அரசு சுகாதாரத்துறை செயல் இழந்துள்ளது. கடந்த 9–ந் தேதி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையின் நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பொறுப்பு ஏற்று துறை அமைச்சர் உடனே பதவி விலக வேண்டும். இதில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். உயிரிழந்த குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென என வலியுறுத்துகிறோம்.

* மத்திய அரசின் கைப்பாவையாக செயலாற்றும் கவர்னரின் செயல்பாடு கண்டனத்திற்குரியது. மாநில மக்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் செயலாற்றும் கவர்னர் கிரண்பெடியை, ஜனாதிபதி உடனே திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

* புதுவை அரசு ஏழை–எளிய வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மட்டும் இலவசம் மற்றும் நலத்திட்ட உதவிகளை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மதுபானக்கடைகளின் விற்பனை நேரத்தை ஒரு நாளைக்கு 5 மணி நேரமாக குறைக்க வேண்டும். நியாய விலைக்கடைகளை காலை முதல் இரவு வரை திறந்து வைக்க வேண்டும். அனைத்து அத்தியாவசிய பொருட்களும் நியாய விலைக்கடைகளின் மூலமாக வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

* தாழ்த்தப்பட்டோர் துணைத்திட்ட நிதியினை தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* இஸ்லாமியர்கள் நலன்காக்க உருவாக்கப்பட்ட இயங்கி வரும் வக்பு வாரியத்தை தனித்தன்மையுடன் சுதந்திரமாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அடுத்த மாதம் ஏப்ரல் 14–ந் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை அனைத்து கிராமங்களிலும், ஏழை எளிய மக்களுக்கும் நல உதவிகளையும், பள்ளி மாணவ–மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.

* புதுவை அரசுக்கு முன்வைத்துள்ள தீர்மானங்களை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் வருகிற 31–ந் தேதி புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு நடத்துவதெனவும் முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக தீந்தமிழன் வரவேற்றார். முடிவில் ஈகையரசு நன்றி கூறினார்.


Next Story