கிணத்துக்கடவு அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
கிணத்துக்கடவு அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவு அருகே உள்ள பழனிக்கவுண்டன்புதூரில் இருந்து சந்தேகவுண்டன்பாளையம் செல்லும் வழியில் மடக்குக்காடு என்ற இடத்தில் தனியார் நிலத்தில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடையை இடமாற்றம் செய்து, அமைக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது.
அங்கு டாஸ்மாக் மதுக்கடை அமைக்க பழனிக்கவுண்டன்புதூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று தனியார் இடத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் முன் நேற்று காலை 9 மணிக்கு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் விரைந்து வந்து முற்றுகையில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கலைந்து சென்றனர்தொடர்ந்து அங்கு மதுக்கடை அமைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு 3 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:–
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன. இதையொட்டி கிணத்துக்கடவு அருகே எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் மூடப்பட்ட மதுக்கடையை, பழனிக்கவுண்டன்புதூரை அடுத்த மடக்குக்காட்டில் அமைக்க உள்ளனர். இந்த பகுதியில் கோவில், பள்ளிக்கூடங்கள் உள்ளதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையில் ஈடுபட்டோம். தற்போது அங்கு மதுக்கடை அமைக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளனர். இதை மீறி அங்கு மதுக்கடை அமைக்கப்பட்டால், கடையை திறக்கவிடாமல் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
வாய்ப்பு இல்லைஇது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், மடக்குக்காட்டில் புதியதாக கடை கட்டுப்பட்டு வருவதால், எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் மூடப்பட்ட கடையை அங்கு கொண்டு செல்ல, கடை உரிமையாளரிடம் கேட்டோம். ஆனால் அவர் மறுத்து விட்டதால், அங்கு மதுக்கடை அமைய வாய்ப்பு இல்லை என்றனர்.