காட்டேரிகுப்பத்தில் நூதன போராட்டம் மண்சட்டி ஏந்தி பிச்சை எடுத்த விவசாயிகள்


காட்டேரிகுப்பத்தில் நூதன போராட்டம் மண்சட்டி ஏந்தி பிச்சை எடுத்த விவசாயிகள்
x
தினத்தந்தி 2 April 2017 5:00 AM IST (Updated: 2 April 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திருக்கனூர் அருகே விவசாயிகள் மண்சட்டி ஏந்தி பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்கனூர்

தமிழக விவசாயிகள் வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக்கோரியும் திருக்கனூர் அருகே உள்ள காட்டேரிகுப்பத்தில் விவசாயிகள் நேற்று நூதன போராட்டம் நடத்தினார்கள்.

தமிழக விவசாயிகளை பிச்சை எடுக்கும் நிலைக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ளதை எடுத்துரைக்கும் வகையில் விவசாயிகள் கையில் மண்சட்டி ஏந்தி ஒவ்வொரு கடையாக சென்று பிச்சை எடுத்து போராட்டம் நடத்தினார்கள்.பஸ் பயணிகள் மற்றும் அவ்வழியாக சென்ற பொது மக்களிடமும் பிச்சை எடுத்தனர். பின்னர் மண்சட்டியை ரோட்டில் போட்டு உடைத்தனர்.

இந்த நூதன போராட்டத்துக்கு வக்கீல் செந்தில் குமார் தலைமை தாங்கினார். ஏ.கே.குமார் முன்னிலை வகித்தார். விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஊமத்துரை, கிருஷ்ணசாமி, முருகன், துரைராஜ் உள்பட ஏராளமான விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது விவசாயிகள் கூறியதாவது;–

தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும், இல்லையெனில் புதுவை விவசாயிகள் அனைவரையும் ஒன்று திரட்டி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.


Next Story