கடமலை–மயிலை ஒன்றியத்தில் தேங்காய் விளைச்சல் பாதிப்பு
கடமலை–மயிலை ஒன்றியத்தில் தேங்காய் விளைச்சல் பாதிப்படைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடமலைக்குண்டு,
தேனி மாவட்டம் கடமலை–மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் விளையும் தேங்காய் நன்கு திரட்சியாக இருக்கும்.
கடமலை–மயிலை ஒன்றியத்தில் விளையும் தேங்காய் மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கடமலை–மயிலை ஒன்றியத்தில் போதிய அளவில் மழை பெய்யாததால் வைகை ஆறு வறண்டது.
வெட்டி அழிப்புஇதனால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றது. அத்துடன் ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டன. வறட்சியின் பிடிக்கு தாக்குபிடிக்காமல் பல ஆண்டுகளாக பலன் கொடுத்து வந்த தென்னை மரங்கள் மடிந்தன. மயிலாடும்பாறை பகுதியில் உள்ள மூலக்கடை, முத்தாலம்பாறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள தோட்டங்களில் தென்னை மரங்கள் கருகின.
பல இடங்களில் மொட்டையாக நிற்கும் தென்னை மரங்கள் பரிதாபமாக காட்சியளிக்கின்றன. வேறு வழியின்றி அந்த தென்னை மரங்களை வெட்டி விவசாயிகள் அழித்து வருகின்றனர். வறட்சியில் இருந்து தப்பிய தென்னை மரங்களில் காய்களும் குறைந்துள்ளன. இதனால் தோட்டம் முழுவதும் நிறைந்து காணப்படும் தேங்காய்கள் தற்போது தோட்டத்தின் ஒரு பகுதியில் குவித்து வைக்கப்படும் அளவிலேயே காய்க்கின்றன. குறிப்பாக 30 தேங்காய்களுக்கு மேல் காய்த்து வந்த மரங்களில் தற்போது 10 தேங்காய்களே காய்க்கின்றன.
நடவடிக்கைமேலும் அது வழக்கமான அளவை விட சிறியதாக இருக்கின்றன. இதனால் தென்னை விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். மேலும் சில விவசாயிகள் தேங்காய்களை பறிக்காமல் மரங்களிலேயே விட்டுவிடுகின்றனர். தானாக கீழே விழும் தேங்காய்களை மட்டும் சேகரித்து எண்ணெய் தயாரிப்புக்கு அனுப்பி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் தற்போது வெயில் அளவு அதிகமாக உள்ளது. அத்துடன் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் தேங்காய் விளைச்சல் மேலும் குறையும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கடமலை– மயிலை ஒன்றியத்தில் கடும் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் கருகி வருகின்றன. மேலும் தேங்காய் விளைச்சல் பாதிப்படைந்த போதிலும், போதிய விலை கிடைப்பதில்லை. ஒரு தேங்காய் ரூ.10 வரையே விலை போகிறது. உரம், பறிக்கும் கூலி உள்ளிட்ட செலவுகளை ஈடுசெய்வதற்கு கூட போதுமான அளவு வருமானம் கிடைப்பதில்லை. எனவே தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.