உத்தமபாளையம் பஸ் நிலையத்துக்குள் வெளியூர் பஸ்கள் வராததால் பயணிகள் அவதி
உத்தமபாளையம் பஸ்நிலையத்துக்குள், வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் வராததால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஆர்.டி.ஓ. அலுவலகம், தாலுகா மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இதனால் உத்தமபாளையத்தை சுற்றியுள்ள கம்பம், கூடலூர், சின்னமனூர், தேவாரம், கோம்பை, ஓடைப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு பணிகளுக்காக உத்தமபாளையத்துக்கு வந்து செல்கின்றனர்.
வாகன ஓட்டிகள் அவதிஉத்தமபாளையம்– கம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காந்தி பஸ்நிலையம் உள்ளது. இந்த பஸ்நிலையத்திற்கு நகர பஸ்கள் மட்டும் வந்து செல்கின்றன. ஆனால் மதுரை, திருச்சி, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் பஸ் நிலையத்துக்குள் வருவதில்லை.
மாறாக பிரதான சாலையில் அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்படுகின்றனர். மேலும் அங்கு இருந்தே வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்லப்படுகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அந்த இடத்தில் மணிக்கணக்கில் பஸ்கள் நிறுத்தப்படுவதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைகின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கைகுறிப்பாக காலை, மாலை நேரங்களில் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் பஸ்களை முந்தி செல்லும் போது வாகனங்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. உயிரிழப்புகளும் தவிர்க்க முடியாததாகி விட்டது.
எனவே வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் உத்தமபாளையம் பஸ் நிலையத்துக்குள் சென்று வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காலை, மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். அப்போது போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.