புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் அலைமோதிய கூட்டம்


புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 2 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-03T02:17:39+05:30)

புதுக்கோட்டை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் அலைமோதிய கூட்டத்தை கட்டுப் படுத்த தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தது. மதுபிரியர்கள் வரிசையாக சென்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

புதுக்கோட்டை,

நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ந் தேதிக்குள் மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 90 டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் மூடப்பட்டன. இதைப்போல புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 14 டாஸ்மாக் கடைகளில் 13 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. புதுக்கோட்டை அருகே அன்னசத்திரம் அந்தோணியார் ஆலயம் பக்கமுள்ள ஒரு டாஸ்மாக் கடை மட்டும் மூடப்படவில்லை.

அலைமோதிய கூட்டம்

இதனால் அந்த டாஸ்மாக் கடையில் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளை சேர்ந்த மதுபிரியர்கள் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மதுபிரியர்கள் மதுபாட்டில்கள் வாங்க வந்ததால், கூட்டம் அலைமோதியது. கடைக்கு வந்த சிலர் முந்திக்கொண்டு வாங்க முயன்றனர். இதனால் டாஸ்மாக் கடையில் உள்ள விற்பனையாளர் கடும் அவதி அடைந்தார்.

இந்த நிலையில் கோவில்களில் திருவிழா நாட்களில் தடுப்பு கட்டைகள் அமைப்பதுபோல், நேற்று அந்தோணியார் ஆலயம் அருகே உள்ள டாஸ்மாக் கடையிலும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டன. இதனால் மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்கி சென்றனர். முன்னதாக கடை திறப்பதற்கு முன்னே புதுக்கோட்டை நகராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மதுபிரியர்கள் டாஸ்மாக் கடைக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து, கடை திறந்ததும் மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.


Next Story