திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி 15–ந் தேதி தொடங்குகிறது


திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி 15–ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 3 April 2017 4:00 AM IST (Updated: 3 April 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி வருகிற 15–ந் தேதி முதல் தொடங்குகிறது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறை அருகே உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறைக்கு செல்வது போல், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இந்த சிலை உப்பு காற்றால் சேதமடையாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலையின் மீது ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.

நிதி ஒதுக்கீடு

அதன்படி திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூச மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்த முறை ஜெர்மன் நாட்டின் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புதிய ரசாயனம் பூசப்படுகிறது. இதன்மூலம் சுமார் 15 ஆண்டுகள் வரை சிலைக்கு உப்பு காற்றால் சேதம் ஏற்படாது என்று கூறப்படுகிறது. இதற்காக தமிழக அரசு ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. நிதி ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து டெண்டர் கோரப்பட்டது.

இந்தபணி குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் உடனடியாக பணியை மேற்கொள்ள உள்ளார்.

முதற்கட்டமாக சிலையை சுற்றி சாரம் கட்டும்பணி வருகிற 15–ந் தேதி முதல் தொடங்குகிறது. தொடர்ந்து, 3 மாத காலம் ரசாயன கலவை பூசும் பணி நடைபெறும் எனதெரிகிறது. அதுவரை திருவள்ளுவர் சிலையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, இந்த 3 மாதங்களும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்படும். பணிகள் முடிந்த பின்பு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.


Next Story