அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா


அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா
x
தினத்தந்தி 9 April 2017 10:45 PM GMT (Updated: 9 April 2017 9:01 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்தனர்.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் குண்டவெளி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு கோவிலில் இருந்து செல்லியம்மன், மாரியம்மன், விநாயகர், காத்தவராயன் உள்ளிட்ட சாமிகள் முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா நடைபெற்றது. நேற்று செல்லியம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் மணிவண்ணன் செய்திருந்தார்.

அரியலூர்

அரியலூர் ஆஸ்பத்திரி சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பால்காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மின்நகரில் உள்ள முருகன் கோவிலுக்கு பஸ்நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவில் இருந்து பக்தர்கள் பால்காவடி எடுத்து ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

திருமானூர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கொள்ளிடம் ஆற்றில் இருந்து பால்குடம், பால்காவடி, தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் தெருக்களில் ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் மகாமாரியம்மனுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பால்குடம் மூலம் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், வயிற்றில் மாவிளக்கு போட்டும், குழந்தைகளை கரும்பு தொட்டிலில் தூக்கி வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வீதிஉலா

தொடர்ந்து இரவு 8 மணியளவில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் 10 மணிக்கு மகாமாரியம்மன் வீதிஉலா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அனிதா, ஆய்வாளர் சட்டநாதன் மற்றும் கோவில் நிர்வாகிகள், சிறப்பு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

விளந்தை

ஆண்டிமடத்தை அடுத்த விளந்தையில் வள்ளி தேவசேனா சமேத அழகு சுப்ரமணியர் சாமி கோவிலில் பங்குனி உத்திர காவடி திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து ஆண்டிமடம் காட்டுகேணி குளக்கரையில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், வேல் காவடி, மயில் காவடி, சித்திர காவடி, பால்குடம் எடுத்தும் மேளதாளத்துடன் ஆண்டிமடம் நான்கு ரோடு, கடைவீதி, மடத்து தெரு, புது பிள்ளையார் கோவில் தெரு வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் வள்ளி தேவசேனா சமேத அழகு சுப்ரமணியர் சாமிக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பக்தி பாடல் இசை நிகழ்ச்சி, சதுர்வேத பாராயணம், தேவார, திருப்புகழ் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story