சட்டரீதியாக உரிமை பெற வேண்டி நீதிமன்றம் வருபவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு


சட்டரீதியாக உரிமை பெற வேண்டி நீதிமன்றம் வருபவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 9 April 2017 10:45 PM GMT (Updated: 9 April 2017 9:24 PM GMT)

சட்டரீதியாக உரிமை பெற வேண்டி நீதிமன்றம் வருபவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி சுதேஷ்குமார் கூறினார்.

முசிறி,


ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம்

முசிறியில் ரூ.4.76 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் கலந்து கொண்டு வளாகத்தை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி எஸ்.குமரகுரு வரவேற்று பேசினார். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாஸ்கரன், செயலாளர் ராஜேந்திரன், மூத்த வழக்கறிஞர்கள் பாலசுப்ரமணியன், செங்குட்டுவன், சப்தரிஷி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ரபீந்தர் திட்ட அறிக்கை வாசித்தார். விழாவில் முசிறி குற்றவியல் நீதிமன்ற நடுவர் வினோதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி பழனிக்குமார், அரசு வழக்கறிஞர் தனபால், முசிறி கோட்டாட்சி தலைவர் ஜானகி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் புதிய நீதிமன்ற கட்டிடங்கள், நீதிபதி குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்து வைத்து பேசியதாவது;–

சாமானியனின் கடைசி புகழிடமாக நீதிமன்றங்கள் அமைகிறது. சட்டரீதியாக உரிமை பெற வேண்டி நீதிமன்றத்திற்கு வரும் வழக்காடிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். சட்டத்திற்கு உட்பட்டு வழக்குகள் நடத்த வேண்டும், சில வழக்குகள் பத்து ஆண்டுகள் கழித்து கூட முடிவிற்கு வருகிறது. லே£க்அதாலத் மூலம் லால்குடியில் 28 வருடங்களுக்கு பிறகு வழக்கு ஒன்று தீர்வு காணப்பட்டுள்ளது. லோக் அதலாத்தில் நடைபெறும் வழக்குகளில் கிடைக்கும் தீர்வுகள் இறுதியானது, முடிவானது. வழக்காடிகள் தான் நீதிமன்றத்தின் அடிப்படை. தொடர் மக்கள் நீதிமன்றங்கள், லே£க்அதாலத், நாடு தழுவிய மெகா மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு வழக்குகள் குறைந்து கொண்டிருக்கிறது.

ஒத்துழைக்க வேண்டும்

திருச்சி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 3 ஆயிரம் வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 13 ஆயிரம் வழக்குகள் குற்றவியல் வழக்குகள் ஆகும். முசிறி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடாமல் வழக்குகளை நடத்தியிருப்பது மிகவும் பாராட்டிற்குரியது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் திருச்சி, முசிறி, குளித்தலை, துறையூர், மணப்பாறை, நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மூத்த வழக்கறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் இன்று முதல் செயல்பட உள்ளது. ரூ.4.76 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றங்கள், பதிவு அறை, காவலர் காத்திருப்பு அறைகள், நீதிமன்ற சிறை, சட்ட உதவி மையம், நூலகம், அரசு வழக்கறிஞர்கள் அறை, கம்ப்யூட்டர் அறைகள் ஆகியவை அமையப்பெற்றுள்ளன. முடிவில் திருச்சி தலைமை குற்றவியல் நீதிபதி ஆர்.கருணாநிதி நன்றி கூறினார்.

லால்குடி

இதே போல் லால்குடி தாலுகா அலுவலக வளாகத்தில் புதிய மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் ஆகிய 3 நீதிமன்றங்கள் இயங்கும் வகையில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இக்கட்டிடத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் ரிப்பன் வெட்டி திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றி உரையாற்றினார். நிகழ்ச்சியில் லால்குடி வக்கீல்கள் சங்கத் தலைவர் நாகராஜன், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் சசிகுமார், துணைத்தலைவர் அமிர்தராஜன் உட்பட வக்கீல்கள் மற்றும் கோர்ட்டு பணியாளர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக திருச்சி செசன்ஸ் நீதிபதி குமரகுரு வரவேற்று பேசினார். விழா முடிவில் திருச்சி முதன்மை நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி கருணாநிதி நன்றி கூறினார்.


Next Story