ராமேசுவரத்தில் பல இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாத அவலம் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தல்


ராமேசுவரத்தில் பல இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாத அவலம் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 April 2017 9:45 PM GMT (Updated: 2017-04-10T23:34:17+05:30)

ராமேசுவரத்தில் பல இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படவில்லை.

ராமேசுவரம்,

நிலத்தடி நீர்மட்டம் குறைவிற்கு முக்கிய காரணமான சீமைக்கருவேல மரங்களை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நடராஜன், மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் வளர்ந்திருக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்து அதற்கான பணிகளை தீவிரமாக செய்து வருகின்றார்.

இந்தநிலையில் ராமேசுவரம் அருகே உள்ள புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கம்பிபாடு கடற்கரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து நிற்கின்றன. இதனால் பள்ளிக்குள் பாம்பு, தேள் உள்ளிட்ட வி‌ஷபூச்சிகள் வந்து செல்கின்றன. இதே போல் தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, சாலையின் இரு புறங்களிலும் வனத்துறைக்கு சொந்தமான சவுக்கு மரங்களை சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து நிற்கின்றன.

வலியுறுத்தல்

மேலும் ஜடா தீர்த்த சிவன் கோவில் செல்லும் சாலை மற்றும் கோவிலை சுற்றியுள்ள சவுக்கு தோப்புகளிலும் அதிக அளவில் காட்டு கருவேல மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. ராமேசுவரத்தில் பல இடங்களில், அரசு மற்றும் தனியார் நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து நிற்கின்றன. இவற்றை அகற்ற ராமேசுவரத்தில் உள்ள அரசுத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர். அவர்கள் ஐகோர்ட்டு உத்தரவை பொருட்படுத்தவில்லை என்று சமூக ஆர்வலர்கள் புகார் கூறினர்.

எனவே தனுஷ்கோடி செல்லும் சாலை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களிலும், ராமேசுவரத்தில் பல இடங்களில் வளர்ந்து நிற்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story