குண்டடத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


குண்டடத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 April 2017 10:30 PM GMT (Updated: 2017-04-11T01:16:44+05:30)

குண்டடத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவை–தாராபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குண்டடம்

குண்டடம் அருகே பெல்லம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு அதில் இருந்து மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

தற்போது நிலவும் வறட்சி காரணமாக ஆழ்குழாய் கிணறுகளில் குடிநீர் வற்றிப்போய் விட்டது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இதையடுத்து அருகில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு சென்று அங்குள்ள கிணறுகளில் குடிநீர் எடுத்து வந்தனர். ஆனால் விவசாயிகளின் தோட்டங்களிலும் தண்ணீர் இல்ல். இதனால் டிராக்டர்கள், வேன்கள் மூலம் சப்ளை செய்யப்படும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்தனர்.

சாலை மறியல்

எனவே குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெல்லம்பட்டி கிராம பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர்.

பின்னர் திடீரென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புள்ள கோவை–தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மனோகரன், குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கதிரேசன், குண்டடம் வட்டார வளர்ச்சி அதிகாரி அய்யாசாமி ஆகியோர் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கோவை–தாராபுரம் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story