தஞ்சையில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ மோதி 3 பேர் காயம்


தஞ்சையில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ மோதி 3 பேர் காயம்
x
தினத்தந்தி 10 April 2017 10:15 PM GMT (Updated: 2017-04-11T01:24:21+05:30)

தஞ்சையில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ மோதி 3 பேர் காயம் அடைந்தனர். குடிபோதையில் கீழே குதித்த டிரைவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். ஆட்டோ டிரைவர். இவர் நேற்று தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை சாலையில் ஆட்டோவை ஓட்டி சென்றார். சோழன்சிலை சிக்னல் அருகே சென்றபோது போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக சாலையின் மையப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த தடுப்பு கம்பிகள் மீது திடீரென ஆட்டோ மோதி, டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியது. இதை பார்த்தவுடன் சாலையோரம் இருந்த தலையாட்டி பொம்மை கடைகளில் பொம்மைகள் வாங்கி கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். ஆனால் அதற்குள் ஈரோட்டை சேர்ந்த 2 பெண்கள், தஞ்சையை சேர்ந்த வாலிபர் ஒருவர் மீது ஆட்டோ மோதியது.

அதன்பின்னரும் ஆட்டோ நிற்காததால் டிரைவர் முருகானந்தம் ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். அவரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு அடித்து உதைத்தனர். டிரைவர் இல்லாமல் ஓடிய ஆட்டோ அடுத்தடுத்து சைக்கிள், பொம்மை கடை ஆகியவற்றின் மீது மோதிவிட்டு சாலையில் சென்று கொண்டிருந்தது. இதை பார்த்த பொம்மை கடைக்காரர்கள் ஓடிச் சென்று ஆட்டோவை பிடித்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த தஞ்சை மேற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் ஆட்டோ டிரைவர் முருகானந்தம் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. காயம் அடைந்த 3 பேரும் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story