செல்போனை தர மறுத்த காதலியை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் கைது


செல்போனை தர மறுத்த காதலியை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 April 2017 9:48 PM GMT (Updated: 2017-04-11T03:17:48+05:30)

செல்போனை தர மறுத்த காதலியை வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்த பயங்கர சம்பவம் வக்கோலாவில் நடந்துள்ளது.

மும்பை,

மும்பை வக்கோலா பகுதியை சேர்ந்தவர் சம்பாஜி மோரே (வயது 20). இவர் அதே பகுதியை சேர்ந்த ஆயிஷா (வயது 18) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். சம்பாஜி மோரே, காதலி ஆயிஷாவின் செல்போனுக்கு எப்போது அழைத்தாலும் அது பிசியாகவே இருந்ததாக தெரிகிறது. இதனால் காதலிக்கு வேறு வாலிபர்களுடன் தொடர்பு இருக்குமோ என சம்பாஜி மோரேக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு மும்பை பல்கலைக்கழகம் அருகே உள்ள சாலையில் ஆயிஷாவை சந்தித்து பேசினார். அப்போது அவர் காதலியின் செல்போனை கேட்டார். ஆனால் அவர் செல்போனை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

கழுத்தை அறுத்து கொலை

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் தலைக்கேறிய சம்பாஜி மோரே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலியின் கழுத்தை அறுத்தார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓட முயன்ற அவரை அந்த வழியாக சென்றவர்கள் மடக்கிப்பிடித்தனர்.

தகவல் அறிந்து வந்த வக்கோலா போலீசார் இளம்பெண்ணை மீட்டு வி.என். தேசாய் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பாஜி மோரேயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனை தர மறுத்த காதலியை வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் வக்கோலா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story