அவினாசி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்


அவினாசி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்
x
தினத்தந்தி 5 May 2017 11:00 PM GMT (Updated: 2017-05-06T03:23:25+05:30)

அவினாசி அருகே குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அவினாசி,

அவினாசி அருகே வடுகபாளையம் ஊராட்சியில் பெரியஓலப்பாளையம், பிச்சாண்டம்பாளையம், ராயகவுண்டன்புதூர், காட்டுவளவு ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த ஆழ்குழாய் கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆழ்குழாய் கிணறுகளில் பொருத்தப்பட்டு இருந்த மின் மோட்டார்கள் பழுதானதால் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமம் அடைந்தனர். எனவே குடிநீரை விலை கொடுத்து வாங்கி வந்தனர். இதையடுத்து மேற்கண்ட பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

சாலைமறியல்

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மேலும் நாளுக்குநாள் குடிநீர் பிரச்சினை அதிகமானது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள், காலிக்குடங்களுடன் அவினாசி–கூட்டப்பள்ளி சாலையில் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், சேவூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது “ பழுதடைந்த மின் மோட்டார்கள் உடனே பழுது நீக்கப்படும் என்றும், அதுவரை வரை லாரிகள் மூலம் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story