நாட்டறம்பள்ளி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி டி.வி.நடிகை பலி


நாட்டறம்பள்ளி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி டி.வி.நடிகை பலி
x
தினத்தந்தி 6 May 2017 5:04 AM IST (Updated: 6 May 2017 5:03 AM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் டி.வி.நடிகை பரிதாபமாக உயிரிழந்தார்.

நாட்டறம்பள்ளி,

நாட்டறம்பள்ளி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் டி.வி.நடிகை பரிதாபமாக உயிரிழந்தார். படப்பிடிப்புக்கு சென்று விட்டு திரும்பியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

கார் டயர் ‘பஞ்சர்’

பெங்களூருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகள் ரீகா சிந்து (வயது 22), பெங்களூருவில் டி.வி. துணை நடிகையாகவும், டி.வி. நடிகர், நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும், விளம்பர மாடலாகவும் இருந்தார். தற்போது தமிழில் ‘ருத்ரா’ என்ற படத்தில் நடித்து வந்தார். படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ரீகா சிந்து சென்னையில் நடந்த படப்பிடிப்புக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு காரில் பெங்களூரு நோக்கி வந்தார். அவருடன் பெங்களூருவை சேர்ந்த அவரது தோழி ரட்சனி (21) மற்றும் அபிஷேக் குமரன் (22), ஜெயக்குமரன் (20) ஆகிய 3 பேரும் காரில் இருந்தனர். காரை அபிஷேக் குமரன் ஓட்டினார்.

நள்ளிரவு 1 மணி அளவில் கார், வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த சுண்ணாம்புகுட்டை என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன்பக்க டயர் பஞ்சரானது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.

நடிகை பலி

இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கிய ரீகா சிந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அபிஷேக் குமரன், ரட்சனி, ஜெயக்குமரன் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரீகா சிந்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடலை பார்த்து குடும்பத்தினர் கதறல் சாவில் மர்மம் இருப்பதாக அண்ணன் புகார்

நடிகை ரீகா சிந்துவின் உடலை பார்த்து அவரது தாய்–தந்தை கதறி அழுதனர். இந்த விபத்தில் ரீகா சிந்துமட்டும் பலியாகியுள்ளதால் சாவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவரது அண்ணன் நவீன் புகார் அளித்துள்ளார்.

கதறல்

நடிகை ரீகா சிந்து பலியான தகவல் அறிந்ததும் அவரது தந்தை பால்ராஜ், தாயார், அண்ணன் நவீன் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் பெங்களூருவிலிருந்து திருப்பத்தூருக்கு விரைந்து வந்தனர். இங்கு ரீகா சிந்து உடல் வைக்கப்பட்டிருந்த திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவர்கள் சென்றனர். அங்கு உடலை பார்த்து கதறி அழுதனர்.

இந்த நிலையில் ரீகா சிந்துவின் அண்ணன் நவீன் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :–

எனது தங்கை சிறு சிறு விளம்பர படங்களில் நடிப்பதற்காக சென்னைக்கு சென்று வந்த போது பழக்கமானவர்கள் தான் காரில் உடன் வந்த 3 பேரும். இந்த 3 பேரும் என்னுடன் பெங்களூரு வந்து கொண்டிருக்கிறார்கள் என தங்கை நள்ளிரவு 12.30 மணிக்கு போனில் தெரிவித்தார். அதன்பிறகு எங்களுக்கு அதிகாலை 4 மணிக்கு தங்கை விபத்தில் இறந்துவிட்டாள் என போன் வந்தது. நள்ளிரவு 1.30 மணிக்கு தங்கையின் உடலை ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்று இருக்கிறார்கள்.

சாவில் சந்தேகம்

வண்டியில் ‘ஏர்பேக்’ இருந்துள்ளது, அந்த ‘ஏர்பேக்’கும் ஓபன் ஆகி இருக்கிறது, அதுவும் இல்லாமல் ‘சீட்பெல்ட்’ எல்லோரும் போட்டு இருந்துள்ளார்கள். எனது தங்கை மட்டும் வெளியே விழுந்துள்ளாள். அந்த 3 பேருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. எனது தங்கை மட்டும் எப்படி கீழே விழுந்து சம்பவ இடத்தில் இறந்துள்ளதால் சாவில் சந்தேகம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


1 More update

Related Tags :
Next Story