‘‘மணல் குவாரி முறைகேடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்’’ நாமக்கல்லில் செல்ல.ராசாமணி பேட்டி


‘‘மணல் குவாரி முறைகேடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்’’ நாமக்கல்லில் செல்ல.ராசாமணி பேட்டி
x
தினத்தந்தி 6 May 2017 11:30 PM GMT (Updated: 6 May 2017 8:08 PM GMT)

‘‘மணல் 2–ம் விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,400 கோடி இழப்பு ஏற்பட்டு வந்தது.

நாமக்கல்,

எனவே, மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்‘‘ என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி கூறினார்.

சம்மேளனம் வரவேற்பு

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இனிவரும் காலங்களில் மணல் குவாரிகளை அரசு ஏற்று நடத்தும் என தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இது காலம் கடந்த அறிவிப்பாக இருந்தாலும், தமிழக முதல்–அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு சம்மேளனம் சார்பில் வரவேற்பை தெரிவித்து கொள்கிறேன். மணல் 2–ம் விற்பனை மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படும். எனவே, கடந்த 2003–ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைபடி 2 யூனிட் மணலுக்கு ரூ.1,000, 3 யூனிட் மணலுக்கு ரூ.1,500 என வங்கி வரைவோலை பெற்றுக்கொண்டு மணல் வழங்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அந்த போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாக இதனை கருதுகிறோம்.

ஆண்டுக்கு ரூ.1,400 கோடி இழப்பு

மணல் 2–ம் விற்பனை மூலம் அரசுக்கு ரூ.200 கோடி வருவாய் கிடைத்து வந்தது. தற்போது நேரடியாக மணல் விற்பனை செய்யப்படும் என்ற முதல்–அமைச்சரின் அறிவிப்பால், அரசு அறிவித்து உள்ள விலையின்படி பயனாளிகளுக்கு மணல் கிடைக்கும், மணல் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.

தனியாருக்கு விடப்பட்ட மணல் 2–ம் விற்பனையை ரத்து செய்து, அரசே மணலை விற்பனை செய்வதால் ஆண்டுக்கு மணல் மூலம் கிடைத்து வந்த வருவாய் ரூ.200 கோடி, இனி வரும் காலங்களில் ரூ.1,600 கோடியாக உயரும். மணல் 2–ம் விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. எனவே, முதல்–அமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.

மேலும் மணலுக்கு தனியாக வாரியம் அமைத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரியை அதற்கு தலைவராக நியமித்து, மாதந்தோறும் குறைதீர்க்கும் கூட்டங்களை நடத்த வேண்டும். இதன் மூலம் 1 லட்சம் மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

வெள்ளை அறிக்கை

மணல் 2–ம் விற்பனை மூலம் தனியாருக்கு கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.60 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது. ஆனால் அரசுக்கு வந்த வருவாய் ரூ.1,000 கோடி தான். எனவே, மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்.

மணல் குவாரிகளில் முறைகேடுகளில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளிடம் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் நாங்கள் ஏற்கனவே மனு கொடுத்து உள்ளோம். இப்போதாவது அதனை நடைமுறைப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

ஆன்–லைன் புக்கிங்

வெளிமாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவதை தடுக்க ஆன்–லைன் புக்கிங் முறையை மணல் குவாரிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை வலியுறுத்தி நாங்கள் ஏற்கனவே ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். தேவைப்பட்டால் பணம் இல்லா பரிவர்த்தனை முறையில் ‘ஸ்வைப்’ எந்திரம் மூலம் மணலுக்கான தொகையை பெற வேண்டும்.

தமிழகத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டு உள்ளதால், மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆங்காங்கே திருட்டுத்தனமாக மணலை ஏற்றி செல்ல தொடங்கி விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி சென்ற 15 லாரிகளை சங்க உறுப்பினர்கள் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளனர். எனவே, கோர்ட்டு வழிமுறைகளை பின்பற்றி மூடப்பட்ட மணல் குவாரிகளை உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

50 சதவீத மானியம்

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்டிட பணிகளுக்கு, ஜல்லி உடைக்கும் போது கிடைக்கும் மணலை (எம்சேண்ட்) பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். முதலில் அரசு கட்டுமான பணிகளுக்கு இந்த மணலை பயன்படுத்த வேண்டும். மேலும் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த மணலை பயன்படுத்தும் நபர்களுக்கு 50 சதவீத மானியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story