தாரமங்கலத்தில் மதுக்கடையை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 37 பேர் கைது


தாரமங்கலத்தில் மதுக்கடையை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 37 பேர் கைது
x
தினத்தந்தி 6 May 2017 10:45 PM GMT (Updated: 6 May 2017 8:50 PM GMT)

தாரமங்கலம் 16–வது வார்டு அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை அருகே கடந்த 3 நாட்களுக்கு முன்பு மதுக்கடை திறந்து விற்பனை நடந்தது.

தாரமங்கலம்,

இந்த மதுக்கடையை மூடக்கோரி நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் பாசறை பொறுப்பாளர் யுவராஜ், மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஜானகி ஆகியோர் தலைமையில் கட்சியினர் கடை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது பற்றி அறிந்த தாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்திய 19 பெண்கள் உள்பட 37 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்கள் மதுக்கடையை மூடக்கோரி கோ‌ஷமிட்டபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

இதேபோல் கொளத்தூரை அடுத்துள்ள அய்யம்புதூர் கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நேற்று முயற்சி மேற்கொண்டனர். இதை கண்டித்து அந்த கிராம மக்கள் கடை அமைய உள்ள இடத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story