விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம்


விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம்
x
தினத்தந்தி 6 May 2017 11:00 PM GMT (Updated: 6 May 2017 9:11 PM GMT)

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய விவசாயிகளை ஒன்றிணைத்து டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று உழவர் உரிமை பயண குழு அறிவித்துள்ளது.

குன்னம்,

சுயாட்சி இயக்கத்தின் உழவர் பிரிவான “வாழ்க விவசாயி இயக்கம்”, “ஏக்தா பரிஷத்”, மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு உள்பட பல விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் உழவர் உரிமை பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த 4-ந்தேதி நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உழவர் உரிமை பயணத்தை தொடங்கிய குழுவினர் நேற்று பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஆண்டிக்குரும்பலூருக்கு வந்தனர். அப்போது அங்கு அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர்.

விவசாயிகளுடன் கலந்துரையாடல்

அதனை தொடர்ந்து குன்னம் வட்டம் சிறுகுடல் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விவசாயிகளுடன் உழவர் உரிமை பயண குழுவினர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் வரவேற்று பேசினார். சுயாட்சி இயக்க மூத்த தலைவர் பால கிருஷ்ணன், தேசிய துணை தலைவர் கிறிஸ்டினாசாமி, தேசிய ஒருங்கிணைப்பாளரும், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான அவிக் சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வாழ்க விவசாயி இயக்க நிறுவனர் யோகேந் திரயாதவ் கலந்து கொண்டு பேசியதாவது:- உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாய ஆர்வலர்கள் ஒன்றிணைந்து உழவர் உரிமை பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் கடந்த 144 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் வறட்சி நிவாரணம் போதுமான அளவில் வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டும் நிலை தான் தற்போது இருக்கிறது. 33 சதவீதம் வறட்சி ஏற்பட்டாலே நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. ஆனால் பயிர் சேதத்திற்கு உரிய நிவாரணம் முழுமையாக வழங்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவிப்பது வேதனை யளிக்கிறது.

போராட்டம்

வறட்சி தொடர்பாக விவசாயிகள் தெரிவிக்கும் குறைகள் அனைத்தையும் தமிழக அரசுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்க ஏற்பாடு செய்வோம். மேலும் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக முறையிட்டு ஆவணங்களை சமர்ப்பித்து விவசாயிகளுக்கு போதிய அளவில் வறட்சி நிவாரணம் கிடைக்க வழிவகை செய்வோம். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமானம் கிடைக்க வேண்டும். அனைத்து வகையான விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உழவர் உரிமை பயண குழு சார்பில் இந்திய விவசாயிகளை ஒருங்கிணைத்து 2018-ல் டெல்லியை நோக்கி பயணம் செய்து போராட்டம் நடத்தி உரிமைகளை மீட்டெடுப்போம். அதற்கு தமிழக விவசாயிகள் ஒற்றுமையுடன் இருந்து ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வீடியோவில் பதிவு

கலந்துரையாடலின்போது, வறட்சி நிவாரணம் உள்ளிட்டவை குறித்து உழவர் உரிமை பயண குழுவினர் கேட்ட கேள்விகளுக்கு விவசாயிகள் தெரிவித்த பதில்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. இவற்றை ஆவணமாக வைத்து கோரிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்போவதாக உழவர் உரிமை பயண குழுவினர் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் வேணுகோபால், துணை தலைவர் சையதுகாசிம், மாணிக்கம், அரியலூர் மாவட்ட தலைவர் அன்பழகன், மாவட்ட செயலாளர் விசுவநாதன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story