வறட்சி நிவாரண தொகை வழங்குவதில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்து வருகிறது


வறட்சி நிவாரண தொகை வழங்குவதில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்து வருகிறது
x
தினத்தந்தி 6 May 2017 10:30 PM GMT (Updated: 6 May 2017 9:26 PM GMT)

வறட்சி நிவாரண தொகை வழங்குவதில் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

காரைக்குடி,

வறட்சி நிவாரண தொகை வழங்குவதில் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி கூறினார். காரைக்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:–

வறட்சி நிவாரண தொகை

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்டங்கள் தோறும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதையொட்டி தென் மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தி கட்சியின் அமைப்பை பலப்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் தற்போது வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களின் முக்கியமான நீராதாரமாக கருதப்படும் வைகை அணை வரலாற்றிலே தற்போது தான் பெருமளவு தண்ணீர் குறைந்து குடிதண்ணீருக்கு கூட பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியத்திற்கு பயன்படும் வகையில் உள்ள மேட்டூர் அணை மற்றும் காவிரி கல்லணையும் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டன. இதேபோல் தமிழத்தில் உள்ள அணைகள், ஏரி, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளும் தற்போது வறண்டு காணப்படுகின்றன.

இத்தகைய வறட்சி நிலையை மத்திய அரசு கவனத்தில் எடுத்தும் கூட இன்னும் வறட்சி நிவாரண தொகை வழங்காததை பார்க்கும் போது, மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பது போல் தெரியவருகிறது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு உடனடியாக தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியை வழங்க வேண்டும்.

விவசாயிகள் தற்கொலை

இதேபோல் தமிழகத்தில் உள்ள வைகை அணை, மேட்டூர் அணை மற்றும் ஏரிகள், குளங்கள், ஊருணிகள், வாய்க்கால் உள்ளிட்ட நீர் தேக்க நிலைகளை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மாநில அரசு சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்போது வணிக நிறுவனங்கள் பாதிக்கப்படுவதற்கு ஆன்லைன் வர்த்தகம் காரணமாகி வருகிறது. எனவே வணிக நிறுவனங்களை காப்பாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் வர்த்தகத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அதோடு சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதையும் தடுக்க வேண்டும். இதனால் சிறு வணிகர்களின் தொழிலை காப்பாற்ற முடியும்.

தமிழகத்தில் விவசாயம் பொய்த்து போனதால் விவசாயிகள் வாங்கிய கடனை கட்டமுடியாமல் தற்கொலை செய்கின்றனர். இதில் தமிழக அரசு தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை என்று கூறுவது மிகவும் அதிர்ச்சியை அளிக்கும் வகையில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் ஆய்வுக்குழு தமிழகத்தில் சில இடங்களில் ஆய்வு செய்தது. இதேபோல் கர்நாடகாவிலும் இந்த ஆய்வுக்குழு ஆய்வு செய்தபோது, அந்த மாநில அரசு அவர்களிடம் போதிய மழையில்லாததால் இந்த மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்று கூறி நிவாரண நிதியை வாங்குவதற்கு முயற்சி செய்து வருகிறது.

டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டம்

கொடநாடு பிரச்சினையில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, ஏற்கனவே அமைதி பூங்காவாக தமிழகம் திகழ்ந்ததைப்போல் மீண்டும் அமைதி பூங்காவாக திகழ நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் மூடப்பட்ட கடைகளை மீண்டும் திறப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கதாகும். இதுதவிர ஆங்காங்கே டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று போராட்டம் நடத்தி வரும் பெண்களை காவல்துறை மூலம் தாக்கும் செயல் கண்டனத்திற்குரியதாகும். இதற்கு உச்ச நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது. எனவே டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் செய்தவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை காவல்துறை திரும்ப பெறவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story