மதுரை அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


மதுரை அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 6 May 2017 11:30 PM GMT (Updated: 6 May 2017 9:46 PM GMT)

மதுரை அருகே மதுக்கடை திறக்க தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரை,

மதுரை ஐராவதநல்லூர் பகுதியில் மதுக்கடை செயல்பட்டு வந்தது. சாலையோரத்தில் இந்த கடை இருந்ததால் அதனை அதிகாரிகள் மூடினர். இதைதொடர்ந்து அந்த கடையை வேறு இடத்தில் திறப்பதற்கான முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதன்படி மதுரை அருகே உள்ள விரகனூர் பகுதியில் அந்த கடையை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் முடிவு செய்தனர். மேலும் அந்த மதுக்கடை அருகிலேயே பார் அமைப்பதற்கு வசதியாக கட்டிடமும் கட்டப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த விரகனூர் அருகே உள்ள சண்முகராஜா நகர், பழனிச்சாமி நகர், கணேஷ் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் நேற்று அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது ஒரு சிலர் பாரின் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் மூடைகளை வெளியே தூக்கி எறிந்து சேதப்படுத்தினர்.

பள்ளி மாணவர்கள் தங்களது கைகளில் மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி கோ‌ஷமிட்டனர்.

சாலை மறியல்

சம்பவ இடத்திற்கு வந்த சிலைமான் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் சமரசம் ஆகவில்லை. மதுக்கடையை மூடினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றும், தாசில்தார் அதற்கு உத்திரவாதம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

இதைதொடர்ந்து தாசில்தார் முருகையா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பகுதியினர், விரகனூர் சுற்றுச்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்கள், கார்கள் என அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்றன.

மதுக்கடை அந்த பகுதியில் அமைக்கப்படாது என்று தாசில்தார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story