பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் அரிய வகை வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி


பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் அரிய வகை வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி
x
தினத்தந்தி 6 May 2017 10:15 PM GMT (Updated: 6 May 2017 10:01 PM GMT)

பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் அரிய வகை வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

பொள்ளாச்சி,

வனவிலங்குகளை பாதுகாக்கவும், அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்க ஆண்டுதோறும் குளிர் காலம் மற்றும் கோடை காலங்களில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். அந்த வகையில், அரிய வகை விலங்குகளான வரையாடுகள், சாம்பல் அணில், சிங்கவால் குரங்குகளை கணக்கெடுக்கும் பணி பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பொள்ளாச்சி– வால்பாறை மலைப்பாதையில் 9–வது கொண்டை ஊசி வளைவில் வரையாடுகள் கணக்கெடுக்கப்பட் டது.

வனச்சரகர் ரவிச்சந்திரன் தலைமையில் வனவர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் வரையாடுகளை கணக்கெடுத்தனர். அப்போது ஒரு வரையாடு ரோட்டோரத்தில் உள்ள தடுப்பில் வந்து படுத்துக் கொண்டது. அதன் அருகில் சென்று வனத்துறையினர் கணக்கெடுத்த னர். இந்த கணக்கெடுப்பு பணியில் 11 குழுக்களை சேர்ந்த 44 பேர் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் அந்த வழியாக வந்த சுற்றுலா பயணிகளும் வரையாடுகளை பார்த்ததும், மகிழ்ச்சியில் வாகனங்களை நிறுத்தி விட்டு குடும்பத்துடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

டாப்சிலிப்

உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப்பில் நேற்று முன்தினம் அரிய வகை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இந்த பணியில் வனச்சரகர் கிருஷ்ணசாமி தலைமையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட 15 பேர் ஈடுபட்டு உள்ளனர். நேற்று சிங்கவால் குரங்குகளை கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) சாம்பல் அணில்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.

வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி குறித்து வனத்துறையினர் கூறியதாவது:–

அழிந்து வரும் அரிய வகை விலங்குகளான வரையாடுகள், சாம்பல் அணில், சிங்கவால் குரங்குகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. வரையாடுகள் மலை உச்சியில் தான் அதிகளவு வசிக்கும். மான், காட்டுப்பன்றி, காட்டெருமை ஆகியவற்றை சிறுத்தை, புலி போன்றவை தாக்குவது போல் வரையாடுகளை தாக்க முடியாது. ஏனென்றால் அவை செங்குத்தான பகுதியில் ஏறி தப்பித்து கொள்ளும்.

பொள்ளாச்சி வனச்சரகத்தில் குறைந்த அளவும், வால்பாறை வனச்சரகத்தில் அக்காமலை பகுதியிலும், கேரளா மாநிலம் மூணாறில் உள்ள ராஜமலையிலும் வரையாடுகள் அதிகளவு வசித்து வருகின்றன. வரையாடுகளை நேரில் பார்த்தும், அவற்றின் எச்சங்கள், கால் தடங்களை வைத்து கணக்கெடுப்பட்டது.

சாம்பல் அணில், சிங்கவால் குரங்குகள்

தமிழகத்தில் சாம்பல் நிற அணில் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமராவதி வனச்சரகத்தில் அதிக அளவில் உள்ளது. மற்ற வனச்சரகங்களில் சாம்பல் அணில் இருப்பதாக தெரியவில்லை. சிங்கவால் குரங்குகள் பொள்ளாச்சி வனச்சரகத்தில் இல்லை. வால்பாறையிலும், உலாந்தி வனச்சரகத்தில் ஆனைகுத்தி சோலையிலும் சிங்கவால் குரங்குகள் வசித்து வருகின்றன.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) சாம்பல்அணில், நாளை (திங்கட்கிழமை) சிங்கவால் குரங்குகளை கணக் கெடுக்கும் பணி நடக்கிறது. கணக்கெடுப்பு பணிகள் முடிந்ததும் இது தொடர்பான அறிக்கை மாவட்ட வன அதிகாரி சுப்பையா மூலம், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story