எதிர்காலத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்க நீர்நிலைகளை பாதுகாத்து மழைநீரை சேமிக்க வேண்டும்


எதிர்காலத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்க நீர்நிலைகளை பாதுகாத்து மழைநீரை சேமிக்க வேண்டும்
x
தினத்தந்தி 6 May 2017 11:28 PM GMT (Updated: 2017-05-07T04:58:06+05:30)

எதிர்காலத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்க நீர்நிலைகளை பாதுகாத்து மழைநீரை சேமிக்க வேண்டும் என்று, அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் டி.ஜி.வினய் பேசினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து, அதன்மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். அப்போது கலெக்டர் டி.ஜி.வினய் பேசியதாவது:–

வறட்சியால் அனைத்து குளங்களும் வறண்டு விட்டன. அதேநேரம் மழை பெய்தால் குளங்களுக்கு தண்ணீர் வருவதில்லை. இதற்கு கால்வாய்களை முறையாக பராமரிப்பு செய்யாததே காரணம். இதனால் நிலத்தடி நீரும் உயர்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. பல ஆண்டுகளாக நீர்நிலைகளை பராமரிப்பு செய்யாததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து நீர்நிலைகளையும் பராமரிப்பு செய்வது முக்கியமானது.

மழைநீரை சேமிக்க வேண்டும்

மழைநீரை சேமிக்காததால், கடுமையான வறட்சியை எதிர்கொள்ள நேரிடுகிறது. எதிர்காலத்தில் வறட்சியை சந்திக்காத வகையில், மழைக்காலங்களில் மழைநீரை முழுமையாக சேமிக்க வேண்டும். இதற்காக நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய தருணம் இதுவாகும். தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாக்க முன்னுரிமை அளித்து குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள் ஒருங்கிணைந்து நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு அனைத்துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளித்தால் தான் பணிகள் முழுமை அடையும். அதனை கூடுதல் பணியாக இல்லாமல் அன்றாட பணியாக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

முன்னுரிமை

மேலும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தில் நீர்நிலைகளை பராமரிக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதுதவிர ஒவ்வொரு துறையிலும் நீர்நிலை பராமரிப்பு திட்ட பணிகளுக்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதன்மூலம் மழைநீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் டி.ஜி.வினய் பேசினார்.

இதில் சப்–கலெக்டர் ஆகாஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரபாகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அருண்சத்யா, வேளாண்மை இணை இயக்குனர் தங்கசாமி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story